இந்திய கடற்படை போரில் இறங்கியிருந்தால் பாகிஸ்தான் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்: ராஜ்நாத் சிங் கருத்து

0
157

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய கடற்படை போரில் இறங்கியிருந்தால் பாகிஸ்தான் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், கோவா அருகில் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பயணம் செய்து அதன் செயல்பாட்டு தயார் நிலையை ஆய்வு செய்தார். பின்னர் கடற்படை மாலுமிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அவர் பேசியதாவது:

ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நேரடி தாக்குதலும் ஆகும். இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டினால், அதன் விளைவுகளை எதிர்கொள்ளவும் தோல்வியை சந்திக்கவும் பாகிஸ்தான் தயாராக இருக்க வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தலை வேரறுக்க அனைத்து வழிகளையும் இந்தியா பயன்படுத்தும்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்றால் அது தீவிரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாகவே இருக்கும். பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் உண்மையிலேயே தயாராக இருந்தால் ஹபீஸ் சயீது, மசூத் அசார் ஆகிய தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். இவர்கள் இருவரும் இந்தியாவின் மிகவும் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் மட்டமல்ல, ஐ.நா.வின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலிலும் உள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை நமது விமானப் படை அழித்தது. இந்த நடவடிக்கையில் இந்திய கடற்படை அமைதியான முறையில் முக்கியப் பங்காற்றியது. பாகிஸ்தான் கடற்படையை அதன் தளத்திலேயே முடக்கி வைத்திருந்தது.

1971-ல் இந்திய கடற்படை நடவடிக்கையில் இறங்கியவுடன் பாகிஸ்தான் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரில் கடற்படை செயல்பட்டிருந்தால், பாகிஸ்தான் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை. அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தனது தவறை மீண்டும் செய்தால் பதிலடி இன்னும் கடுமையாக இருக்கும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here