Home சினிமா செய்திகள் ‘இதயம் முரளி’ விமர்சனம்: நினைவலைகளைத் தூண்டும் ஒருதலைக் காதல் அனுபவம் எப்படி?

‘இதயம் முரளி’ விமர்சனம்: நினைவலைகளைத் தூண்டும் ஒருதலைக் காதல் அனுபவம் எப்படி?

0

தமிழ் சினிமாவில் ஒருதலைக் காதல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது முரளி நடிப்பில் வெளியான ‘இதயம்’ திரைப்படம்தான். சொல்லாத காதலின் வலியை பேசிய அந்த திரைப்படம் அப்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட அதே போன்றதொரு கதைக்களத்தில் முரளியின் மகன் அதர்வா நடித்துள்ள படம்தான் ‘இதயம் முரளி’.

திருச்சியில் தன் மாமாவுடன் (நட்டி) வளரும் இதயாவின் (அதர்வா) வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் மலரும் காதல்கள் அதை சொல்ல முடியாமல் தவிக்கும் ஏமாற்றம் இவைதான் இப்படத்தின் ஒன்லைன்.

பள்ளிப் பருவத்தில், தனது வகுப்பு ஆசிரியை கீதா (ஜோனிதா காந்தி) மீது இதயாவுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து பின்னர் பள்ளிப் பருவத்தில், டியூஷன் வகுப்பில் சந்திக்கும் சாம் என்ற பெண் (ப்ரீத்தி முகுந்தன்) மீது காதல் கொள்கிறார். ஆனால் அவரது பிறந்தநாள் விழாவில் நடக்கும் ஒரு ட்விஸ்ட்டால் அந்தக் காதலும் தோல்வி அடைகிறது.

இறுதியாக, கல்லூரி பருவத்தில் அமுதா என்ற மருத்துவ கல்லூரி மாணவியை (கயாடு லோஹர்) சந்திக்கிறார். இந்த முறையாவது இதயா தன் காதலை வெளிப்படுத்தினாரா, அவரது காதலுக்கு விடிவுகாலம் பிறந்ததா என்பதே படத்தின் மீதிக் கதை.

அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் ஓர் உணர்வுபூர்வமான, பார்ப்பவர்கள் எளிதில் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்ளத்தக்க ஒரு கதைக்களத்தை, 90-கள் மற்றும் 2000-களின் ஆரம்பக் காலத்து நாஸ்டால்ஜியா நினைவலைகளைத் தூண்டும் வகையில் கலர்ஃபுல் காட்சிகளுடன் சொல்ல முயன்றிருக்கிறார். படம் தொடங்கியதுமே விரியும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் நம்மை 30 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன.

ஏராளமான நாஸ்டால்ஜியா அம்சங்களை தூவி ஒரு நேர்த்தியான தொடக்கத்தை கொடுத்து நம்மை நிமிர்ந்து உட்கார செய்கிறார். எனினும் ஒரு கட்டத்துக்கு மேல் இந்த நாஸ்டால்ஜியாவே ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு காட்சியிலும் அதையே திரும்பத் திரும்ப காட்டுவது சலிப்பை தருகிறது. முதலில் சுவார்ஸ்யமாக தொடங்கிய அந்த காட்சிகள், போகப் போக ஏற்கெனவே பல படங்களில், யூடியூப் வீடியோக்களில் பார்த்த க்ளீஷே டெம்ப்ளேட் ஆக மாறிப் போய் விடுகின்றன.

முரளியின் மூன்று காலகட்டக் காதல்களும் ஆரம்பத்தில் புன்னகையை வரவழைத்தாலும், கதை நகர நகர அதன் ஆழம் குறையத் தொடங்குகிறது.

‘பிரேமம்’ பாணியிலான திரைக்கதையாக இருந்தாலும் அதில் சொல்லப்பட்ட மூன்று காதல்களும் நாயகனின் வாழ்க்கையை பார்வையாளர்களோடு எளிதில் தொடர்புப்படுத்தும் வகையில் இருந்தன. ஆனால், ‘இதயம் முரளி’ படத்தில் வரும் காதல்கள் வெறுமனே எபிசோடுகள் போல மேலோட்டமாக வந்து போகின்றனவே தவிர, நாயகனின் மனதில் இருக்கும் தீவிரமான உணர்வுகளை ஆடியன்ஸுக்கு கடத்த தவறுகின்றன.

மொட்டை மாடியில் கிரிக்கெட் பார்க்கும்போது வரும் சண்டை ஏன், ரைசா வில்சன் வரும் பிரசவ காட்சி ஏன்? ரயிலில் போகும் நாயகியிடம் காதலை சொல்லமுடியவில்லை சரி, அவரிடம் போன் இருக்கிறதே, அதில் கூட ஹீரோவால் பேசமுடியாதது ஏன்? – இப்படி பல ‘ஏன்’கள் படம் முழுக்க எழுகின்றன.

எனினும் படம் எங்கும் தேங்கி நின்றுவிடாமல் ஓடிக் கொண்டே இருக்கும் வகையில் கலகலப்பான திரைக்கதையால் தப்பிக்கிறது. அதற்கு  மிகப் பெரிய பலமாக அமைவது நடிகர்கள் தேர்வு.

அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் தொடங்கி, ‘பரிதாபங்கள்’ சுதாகர், ட்ராவிட் செல்வம், தமன், நிஹாரிகா, ரக்‌ஷன் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். சுதாகர் வரும் காட்சிகள் கலகலப்புக்கு உத்தரவாதம் தருகின்றன. சிறப்பு தோற்றத்தில் வரும் ஃபஹத் ஃபாசில் க்ளைமாக்ஸில் மாஸ் காட்டி அப்ளாஸ் அள்ளுகிறார். ஒட்டுமொத்த படத்தையும் அந்த ஒரு காட்சியில் தூக்கி நிறுத்தி விடுகிறார்.

அதேசமயம், இரண்டாம் பாதியில் பல தேவையில்லாத காட்சிகள் படத்தின் நீளத்தை கூட்டி பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கின்றன. உதாரணமாக, பேருந்தில் நடக்கும் சண்டைக்காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளன. கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளுக்கான அழுத்தமான காரணங்களை எங்கும் சொல்லாமல், கிளைமாக்ஸ் சற்றே செயற்கையாக முடிக்கப்பட்டுள்ளது.

ரைசா வில்சன், சின்னி ஜெயந்த், பப்லு பிரித்விராஜ் என ஏகப்பட்ட தேவையற்ற கேமியோக்கள் கதைக்கு தொடர்பே இல்லாமல் வந்து செல்கின்றன. இடைவேளையின் போது ரயில் நிலையத்தில் ‘இதயம்’ படத்தில் இடம்பெற்ற ‘பொட்டு வைத்த வட்ட நிலா’ பாடல் வரும்போது உள்ளம் உருகுகிறது.

காதலை சொல்வதற்கான வாய்ப்பு இருந்தும் ஹீரோ தயங்குவதற்கான சூழல் இன்னும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கலாம். படத்தின் தலைப்புக்காக வெறுமனே வைக்கப்பட்ட காட்சிகளாகவே அவை தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. 

படத்தின் மற்றொரு பலம் தமனின் பின்னணி இசை. தொடக்கம் முதல் இறுதி வரை படத்தின் ஓட்டத்துக்கு ஏற்ப பார்வையாளர்களின் மனநிலையை தக்க வைக்க உழைத்திருக்கிறார்.

‘இதயம் முரளி’ ஆழமில்லாத காதல் காட்சிகளையும், ஆங்காங்கே சில தேவையற்ற இழுவையையும்  கொண்டிருந்தாலும், துப்பாக்கி சத்தங்கள், ரத்தம், வன்முறை எதுவும் இல்லாமல் மனதுக்கு இதமான ஒரு சுமாரான ஃபீல் குட் படத்தை பார்க்க விரும்புவோர் டிக்கெட் எடுக்கலாம். 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version