காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன் என திருவனந்தபுரம் எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் தொடர்ந்து காங்கிரஸில் இருக்கிறேன். வேறு எங்கும் செல்ல மாட்டேன். காங்கிரஸில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன். எனது முந்தைய கருத்துகள் பாஜகவுக்கு ஆதரவான கருத்துகள் கிடையாது. நமது தேசத்துக்கு ஆதரவான கருத்துகள். சில விவகாரங்களில் எனது கருத்துகள் மிகைப்படுத்தப்பட்டன.
ராகுல் காந்தி மதவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணர்வுக்கு எதிராக குரல் எழும்பி வருகிறார். நானும் மதவாதத்தை தீவிரமாக எதிர்க்கிறேன். இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கேரள காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சதீசன் கூறும்போது, “கேரள காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை. நாங்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறோம். வரும் தேர்தலின்போது 140 தொகுதிகளிலும் சசி தரூர் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வார்” என்று தெரிவித்தார்.



