“முதல்வராக தொடர்வேன்” – சித்தராமையா திட்டவட்டம்

0
43

கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முயற்சித்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா தானே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் முதல்வராக தொடரப் போவதாக தெரிவித்தார்.

கர்நாடக முதல்வராக‌ சித்தராமையா பொறுப்பேற்று வருகிற மே மாதத்துடன் 3 ஆண்டுகள் ஆகிறது. இதனால் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தன‌க்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 10-க்கும் மேற்பட்டோர் இதே கோரிக்கையை வலியுறுத்தி போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது குறித்து முதல்வர் சித்தராமையா நேற்று பாகல்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் முதல்வர் நாற்காலி காலியாக இல்லை. இப்போது அதனை பற்றி பேசுவது தேவையற்றது. முதல்வர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். ஆனால் மக்களின் ஆசீர்வாதம் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் முதல்வராக முடியும். காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.

ஊடகங்கள் எதற்காக முதல்வர் விவகாரத்தை பெரிதாக்குகின்றன. ஊடகங்களின் இத்தகைய செயல்பாட்டில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை மக்களின் ஆசீர்வாதமும், காங்கிரஸ் மேலிடத்தின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. எனவே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் நானே முதல்வராக தொடர்வேன். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார். இந்த கருத்துக்கு டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here