“அபிஷேக் சர்மா தடுப்பாட்டம் ஆடியதை பார்த்து ஆச்சரியமடைந்தேன்” – கவாஸ்கர் பகிர்வு | T20 WC 2026

0
22

இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா தடுப்பாட்டம் ஆடியதை பார்த்து ஆச்சரியமடைந்ததாக முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தனது ஆட்டத்தின் மூலம் விமர்சகர்களின் விமர்சனத்தை தவிர்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 0, 0, 0, 15 என முதல் 4 ஆட்டங்களில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா. இந்த சூழலில் ஜிம்பாப்வே உடனான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 30 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், அவரது ஆட்டம் குறித்து கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

“அபிஷேக் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஜிம்பாப்வே அணியுடன் 55 ரன்கள் சேர்த்ததன் மூலம் தனது ஆட்டத்தின் மீது சந்தேகம் கொண்டவர்களை அவர் வாயடைக்க செய்துள்ளார். தனது இன்னிங்ஸை தொடங்க சற்று நேரம் எடுத்துக் கொண்டார். ஆப்-ஸ்பின்னர்களுக்கு எதிராக பெரிய ரிஸ்க் எடுக்காமல் ஆடினார்.

இந்த ஆட்டத்தில் அபிஷேக் சர்மா தடுப்பாட்டத்துக்கான ஷாட் ஒன்றை ஆடியிருந்தார். அதன் மூலம் பந்தை தடுத்து ஆடினார். அதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில், வழக்கமாக அவர் அப்படி ஆடி நம் பார்த்தது கிடையாது.

இதற்கு முந்தைய அவரது மோசமான இன்னிங்ஸ் மூலம் அனுபவ ரீதியாக சிலவற்றை அவர் கற்றுக் கொண்டிருப்பார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இது மாதிரியான சூழலை கடந்திருப்பார்கள். நிச்சயம் இதன் மூலம் தொடரின் அடுத்தடுத்த முக்கிய ஆட்டங்களில் சிறந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை தருகிறது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான ஆட்டத்தில் இந்திய அணி சிறந்த திட்டமிடலை இந்தியா மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், முதல் பந்தில் இருந்து பெரிய ஷாட் ஆட அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் முயற்சிப்பார்கள்” என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here