திரைப்பயணத்தின் ஆரம்பத்திலேயே வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்ததாக நடிகை ருக்மிணி வசந்த் தெரிவித்துள்ளார்.
‘சப்த சாகரதாச்சே எல்லோ’ படத்தின் மூலம் கன்னடம் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை ருக்மிணி வசந்த். கடைசியாக ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படத்தில் ‘கனகவதி’ என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடித்தது குறித்து ருக்மிணி கூறுகையில், “திரைப்பயணத்தின் ஆரம்பத்திலேயே வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தது. மக்கள் என்னை மென்மையான கதாபாத்திரங்களிலேயே பார்த்துப் பழகியதால், இந்த மாற்றம் என் எதிர்கால வாய்ப்புகளைப் பாதிக்குமோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டது.
இனி வாழ்நாள் முழுக்க வில்லி கதாபாத்திரம்தான் கிடைக்குமா என்றெல்லாம் தோன்றியது. ‘நல்ல பெண்’ பிம்பத்தைத் தாண்டி வெளியே வருவது சவாலாக இருந்தது. எனினும், படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு கிடைத்த நேர்மறையான விமர்சனங்கள் எனது பயத்தைப் போக்கின. ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டுவது எனக்கு நிம்மதி அளிக்கிறது” என்று ருக்மிணி தெரிவித்தார்.







