தமிழகத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் பாஜக.வின் பகல்கனவு, திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என்றும் 2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி’ எனும் பெயரில் நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டம் மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2019-ம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும், மகத்தான வெற்றிகளை பெற்றுவருகிறோம். நமது வெற்றிகள் எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போகிறோம். இதை ஆணவத்தில் சொல்லவில்லை. உங்கள் உழைப்பின் மீதும், ஆட்சியின் சாதனைகள் மீதும், தமிழக மக்கள் மீதும் வைத்துள்ள நம்பிக்கையில் சொல்கிறேன்.
இந்தியாவில் எந்த மாநில அரசும் நம் அளவுக்கு சாதனைகள் செய்திருக்கமாட்டார்கள். மீதமுள்ள சில வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றி தருவோம். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வால்தான், பாஜகவின் பாசிச ஆட்சிக்கு அடிபணியாமல் எதிர்த்து நிற்கிறோம். இதனால்தான் பாஜக.வுக்கு நம் மீது கோபம் வருகிறது. அதனால்தான் பல்வேறு சூழ்ச்சிகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இங்கு உங்கள் அனைவரையும் ஒன்றாக பார்க்கும்போது, உங்கள் முகங்களில் உதயசூரியனை நான் காண்கிறேன். அதை தமிழக மக்களின் இதயசூரியனாக மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களுக்குதான் உள்ளது.
இந்த கூட்டத்துக்கு பின்பு அனைவரும் ஒருங்கிணைந்து ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்று முன்னெடுக்க வேண்டும். எனது வாக்குச் சாவடியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்று, அங்கு நமது வெற்றியை உறுதி செய்வதற்கான பரப்புரையில் நிச்சயமாக நான் ஈடுபடப்போகிறேன். அதேபோல், ஒவ்வொரு ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளரும், தனக்குகீழ் வரும் ஒவ்வொரு பூத்துக்கும் தனித்தனி கூட்டங்களை தினமும் மாலையில் நடத்த வேண்டும். இந்த கூட்டங்களில் அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட சார்பு அணி நிர்வாகிகளில் இருந்து, மாநில நிர்வாகிகள் வரை அனைத்து நிர்வாகிகளும், தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு டார்கெட் நிர்ணயித்து கொள்ளவேண்டும். அதன் விவரங்களை மாவட்டச் செயலாளர் மூலமாக எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்தல் பணியாற்ற முதல் தேவை, ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கு. அதை நீங்கள் அனைவரும் உள்ளத்தில் தாங்கி ஒற்றுமையாக பணியாற்றினால் 2026-ல் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைவது உறுதியாகிவிடும். 2026-ல் நடைபெறுவது தனித்தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கும் நமது ஆட்சியா? டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா? என்று தீர்மானிக்கும் தேர்தல். எனவே, திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும்.
தமிழகம் இப்போது சமூக, அரசியல், பொருளாதார படையெடுப்பை சந்தித்து வருகிறது. பல்வேறு வழிகளில் நமக்கு தொல்லை கொடுக்கிறார்கள். இதை முறியடிக்கும் வல்லமை நமக்குதான் இருக்கிறது. பாஜகவின் பகல்கனவு திமுக இந்த மண்ணில் இருக்கும்வரை நிறைவேறாது.தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை காண்பித்து மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நாம் பணியமாட்டோம். பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால், பாஜக.வும் அதன் கூட்டாளியான அதிமுகவும் வெற்றி பெற்றுவிடலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். எனவே, மக்களின் வாக்குரிமையையே பறிக்க துணியும் எஸ்ஐஆர் செயல்பாட்டை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். உண்மையான வாக்காளர் அனைவரும் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியவர்கள் திமுகவினரும் – தோழமைக் கட்சியினரும்தான்.
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியாக இருந்த அந்தக் கட்சியை, அமித்ஷாவிடம் விழுந்து சரண்டர் செய்துவிட்டார். அந்தக் கூட்டணியை தமிழக மக்களும் விரும்பவில்லை. அவர்கள் கட்சியினரும் விரும்பவில்லை. மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு செல்லவில்லை. தமிழகத்துக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ள அவருடைய சந்தர்ப்பவாதத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அதை நம்முடைய கூட்டணிக்கான வாக்குகளாக மாற்ற வேண்டும். நாம் 7-வது முறையும் ஆட்சியை பிடிப்பதுடன், தமிழகத்தை நிரந்தரமாக ஆளும் தகுதி, திமுகவு-க்கு தான் உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த செய்தியை தொண்டர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்த்து தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும். தொண்டர்களை நம்பித்தான் நான் இருக்கேன் என்பதை மறந்துவிட வேண்டாம்.இவ்வாறு அவர் பேசினார்.














