“இவ்வளவு ஆணவத்துடன் நடந்து கொள்ளும், இவ்வளவு பொய் பேசும் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரை நான் பார்த்ததே இல்லை” என்று தலைமைத் தேர்தல் ஆணையருடனான சந்திப்புக்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமாக சாடினார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இன்று சந்தித்தார். அவருடன் 15 பேர் கொண்ட கட்சி நிர்வாகிகளும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்களும் சென்றனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். நான் டெல்லி அரசியலில் நீண்ட காலமாக இருக்கிறேன். 4 முறை அமைச்சராகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளேன்.
இவ்வளவு ஆணவமாகவும் இவ்வளவு பொய் பேசுபவராகவும் இருக்கும் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரை நான் பார்த்ததே இல்லை. உங்கள் நாற்காலியை நான் மதிக்கிறேன் என்று நான் அவரிடம் சொன்னேன். ஏனென்றால், எந்த நாற்காலியும் யாருக்கும் நிரந்தரமல்ல. ஒரு நாள் நீங்கள் வெளியேறத்தான் வேண்டும்.
மேற்கு வங்கம் ஏன் குறிவைக்கப்படுகிறது? ஜனநாயகத்தில் தேர்தல்கள் ஒரு திருவிழா. ஆனால், நீங்கள் 58 லட்சம் பெயர்களை நீக்கிவிட்டீர்கள். அவர்களுக்கு இருக்கும் உரிமையை அவர்கள் பாதுகாத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால், தேர்தல் நடைபெறும் மாநிலங்களை தவிர்த்துவிட்டு முறையான திட்டமிடலுடன் செய்திருக்க வேண்டும். ஆனால், நீங்கள் (தேர்தல் ஆணையம்) அவ்வாறு செய்யவில்லை. அசாமில் தீவிர திருத்தப் பணிகளை நீங்கள் மேற்கொள்ளவில்லை. ஆனால், மேற்கு வங்கத்திலும் தமிழ்நாட்டிலும் செய்திருக்கிறீர்கள்.
மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டீர்கள். இதில் நிறைய முரண்பாடுகளும் தவறான பதிவுகளும் உள்ளன.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு தந்தையரின் பிறப்புச் சான்றிதழ்களைக் கொண்டு வரச் சொன்னால் அது எப்படி சாத்தியாக இருக்கும்? முன்பெல்லாம் குழந்தைகள் வீடுகளில்தான் பிறந்தார்கள்; மருத்துவமனைகளில் அல்ல. பிரதமரிடம் அவருடைய தந்தை மற்றும் தாயாரின் பிறப்புச் சான்றிதழ்கள் அவரிடம் இருக்கிறதா?
நான் அத்வானியை மிகவும் மதிக்கிறேன். ஆனால், அவரால், அவரது தந்தை மற்றும் தாயாரின் பிறப்புச் சான்றிதழ்களை வழங்க முடியுமா? இது பொருத்தமில்லாத நடவடிக்கை. தவறான திட்டம். சட்டவிரோதமானது.
தீவிர சிறப்பு திருத்தம் காரணமாக பிஎல்ஓ-க்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். நன் என்னுடன் 100 பேரை அழைத்து வந்துள்ளேன். அவர்களில் சிலர், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் உயிருடன் என்னோடு இங்கு இருக்கிறார்கள்.
தாங்கள் செய்தது அனைத்தும் சரி என்று அவர்கள் (தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள்) கூறுகிறார்கள். வெளியில் இருந்து கேமரா மேன்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்கள் பாஜகவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறார்கள்.
சுமார் 2 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. என்னால், லட்சக்கணக்கான மக்களை டெல்லிக்கு அழைத்து வர முடியும். யார் முன்னிலையிலும் அவர்களை அணிவகுத்து நிற்க வைக்க முடியும்.
அவர்கள் (தேர்தல் ஆணையம்) எங்களை அவமானப்படுத்திவிட்டார்கள். இந்த வகையான தேர்தல் ஆணையம் மிகவும் ஆணவமானது. அவர் ஒரு குறிப்பிட்ட மனப்பான்மையுடன் பேசினார். வேண்டுமென்றே, அவர் எங்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அவர் எங்களை மோசமாக நடத்தினார்.
நீதி கேட்டு உங்களைச் சந்திக்க வந்ததற்காக நான் வருந்துகிறேன் என்று நான் அவரிடம் சொன்னேன். எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அநீதி இழைத்து பொய்களை சொல்கிறார். நாங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பிறகு அவர் ஒரு விளக்க உரை கொடுக்கிறார். அனைத்தும் குப்பை. அனைத்தும் பொய். நாங்கள் ஐந்து கடிதங்களைக் கொடுத்தோம். அவர் ஒரு கடிதத்துக்கும் பதில் அளிக்கவில்லை” என்றார் மம்தா பானர்ஜி.



