தமிழகத்தில் ரேஷன் கடையில் அரிசி மிகவும் தரமாக இருக்கிறது. நானும் சிறு வயதில் இருந்து ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறேன் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் மூலதன நிதியின் கீழ் ரூ.8.49 கோடியில் மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில், புனரமைக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் பூங்காவை உணவுத் துறை அமைச்சர் ப.வெங்கட்ரமணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆட்சியில் ரூ.12 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்ட பொருட்களின் தேவைகளை குறைத்து, ரூ.8 கோடியில் நாகேஸ்வர ராவ் பூங்கா புனரமைக்கப்பட்டுள்ளது.
பொன்னி அரிசி சாப்பிடுவதை மக்கள் சமூக அந்தஸ்தாக (சோஷியல் ஸ்டேட்டஸ்) பார்க்கிறார்கள் என்று நான் ஆங்கிலத்தில் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. மக்களின் விருப்பம் என்றுதான் நான் சொன்னேன். நானும் சிறு வயதில் இருந்து ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறேன்.
சோஷியல் ஸ்டேட்டஸ் என்பது மக்கள் விருப்பத்துக்காக சாப்பிடுவது. வார இறுதி நாட்களில் சனி, ஞாயிறுக்கிழமைகளில் வெளியில் சென்று சாப்பிடுவோம். அது ஒரு சந்தோஷம், நம்ம குடும்பத்துக்காக செலவிடும் நேரம் அது. அதைதான் சொன்னேன்.
தரமான அரிசி
வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் கிடங்கில் இருந்து கொள்முதல் செய்து அமுதம் அங்காடி மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் வெளி மார்க்கெட்டைவிட குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்.
மலிவு விலையில் 1 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கொள்முதல் செய்து, குறைந்தபட்சம் 5 கிலோ அரிசியை அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ.30-க்கு வழங்குகிறோம்.
ரேஷன் கடையில் அரிசி தரமாக இருக்கிறது. மக்கள் இதைதான் சாப்பிட வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த மாட்டேன். ஒவ்வொரு மக்களின் வாழ்வாதாரமும் மிக முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
