நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்தும் வேலையை செய்தேன்: சொல்கிறார் விராட் கோலி

0
176

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. 242 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 45 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலி கூறியதாவது:

அரை இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான முக்கியமான ஆட்டத்தில் சிறந்த முறையில் பேட்டிங் செய்ய முடிந்தது நன்றாக இருக்கிறது. ரோஹித் சர்மா விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்த ஒரு ஆட்டத்தில் பங்களிப்பை வழங்கியது நன்றாக இருக்கிறது, கடந்த ஆட்டத்தில் கற்றுக்கொண்டதை புரிந்துகொண்டு செயல்பட்டோம்.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிடில் ஓவர்களில் அதிக ரிஸ்க் எடுக்காமல் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதே எனது வேலையாக இருந்தது. இறுதி பகுதியில் ஸ்ரேயஸ் ஐயர் விரைவாக ரன்கள் சேர்த்தார். எனக்கும் சில பவுண்டரிகளும் கிடைத்தன. இது எனக்கு வழக்கமான ஒருநாள் போட்டியை விளையாட அனுமதித்தது. என்னுடைய ஆட்டம் குறித்து எனக்கு நல்ல புரிதல் உள்ளது.

அது வெளிப்புற சத்தத்தைத் தவிர்ப்பது, எனது இடத்தில் நிலைபெறுவது, ஆற்றல் மட்டங்களையும் எண்ணங்களையும் கவனித்துக்கொள்வது ஆகியவற்றை பற்றியது ஆகும். தெளிவு இருப்பது முக்கியம், பந்தில் வேகம் இருக்கும்போது நீங்கள் ரன்களைப் பெற வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் சுழற்பந்து வீச்சாளர்கள் விஷயங்களை ஆணையிட முடியும்.

ஷுப்மன் கில், ஷாகின் ஷா அப்ரிடிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார். அவர், உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது. பவர்பிளேயில் 60 முதல் 70 ரன்கள் எடுக்க வேண்டும், இல்லையென்றால் எப்போதும் ஆட்டத்தை துரத்தி பிடிக்க வேண்டியதாக இருக்கும். ஸ்ரேயஸ் ஐயர் 4-வது இடத்தில் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டார். இப்போது இங்கேயும் சிறப்பாக செயல்படுவது நன்றாக இருக்கிறது.

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here