திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான லால்குடியில் உள்ள 5 ஒன்றியங்கள், 3 பேரூராட்சிகள், ஒரு நகராட்சியில் பதவியில் உள்ள திமுக நிர்வாகிகள் அதே ஊரை சேர்ந்த மாவட்டச் செயலாளர் வைரமணிக்கு உரிய மரியாதை தருவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் அண்மையில் நடைபெற்ற ‘என் வாக்குச்சாவடி; வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது அமைச்சர் நேரு முன்பே குமுறித் தள்ளிவிட்டார் வைரமணி. அவர் பேசும்போது… ‘‘ஒரு மாவட்டச் செயலாளரை அழைக்காமல், படம், பெயர், போடாமல் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். திரும்பத் திரும்ப இதை நான் சொல்வது எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்தப் பதவியை விட்டுவிட்டுச் செல்லலாம் என கருதுகிறேன். கட்சியில் ஆளுக்கு மரியாதை இல்லை; பொறுப்புக்குத் தான் மரியாதை. என் சொந்த ஊரிலேயே இப்படி ஒரு கூட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு உறுப்பினர் கார்டு கூட இல்லை. திமுகவை ராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்படும் இயக்கம் என்று சொல்கிறார்கள். அப்பேர்பட்ட இயக்கத்தில் சில புல்லுருவிகள் யார் சொல்லிக் கொடுத்து இப்படி செய்கிறார்கள் என்று எனக்குத் தெரிய வேண்டும்’’ என்று கொந்தளித்தார்.
இதன்பின்னணி குறித்து மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘தன்னை நிர்வாகிகள் மதிப்பது இல்லை என்று நேருவிடம் வைரமணி பலமுறை சொல்லி இருக்கிறார். ஆனால், பிரச்சினையை தீர்ப்பதில் நேரு ஆர்வம் காட்டவில்லை. மாறாக இவற்றை ரசிக்கவும் செய்கிறார். அதனால்தான் அவரை மேடையில் வைத்துக்கொண்டே வைரமணி காய்ச்சி எடுத்துவிட்டார்’ என்றனர். இதுகுறித்து மாவட்டச் செயலாளர் வைரமணியிடம் கேட்டபோது, ‘‘கட்சிப் பணிகளை செய்யாமல், எங்களை போன்று பணியாற்றுபவர்களுக்கு இடையூறு செய்பவர்களை தோலுரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கூட்டத்தில் பேசினேன். முதன்மைச் செயலாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்’’ என்றார்.














