விவாகரத்து மனுவை திரும்ப பெற மறுத்ததால் மனைவி வீட்டின் முன்பாக கணவர் தீக்குளித்து உயிரிழப்பு

0
160

பெங்களூருவில் விவாகரத்து மனுவை மனைவி திரும்பப் பெற மறுத்ததால் அவரது வீட்டின் முன்பு தீக்குளித்த கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ள குனிகலை சேர்ந்தவர் மஞ்சுநாத் (39). வாடகை கார் ஓட்டுநரான இவர் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வந்தார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த நயனா ராஜுவுக்கும் கடந்த 2013-ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 9 வயதில் மகன் இருக்கிறான்.

இந்நிலையில் இந்த தம்பதியினர் இடையே கடந்த 2022-ல் சண்டை ஏற்பட்டதை தொடர்ந்து நயனா ராஜு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை மஞ்சுநாத் சமாதானப்படுத்த முயன்றார். என்றாலும் அவருடன் வாழ விரும்பவில்லை எனக்கூறி நயனா ராஜு கடந்த மாதம் விவகாரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

இதையடுத்து மஞ்சுநாத் நேற்று முன்தினம் நாகர்பாவியில் உள்ள நயனா ராஜுவின் வீட்டுக்கு சென்று விவாகரத்து மனுவை வாபஸ் பெறும்படி வலியுறுத்தினார்.

ஆனால் நயனா ஏற்க மறுத்ததால் விரக்தி அடைந்த மஞ்சுநாத் மனைவியின் வீட்டின் முன்பாக தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஞான பாரதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மஞ்சுநாத்தின் தாய் மஹாலட்சுமி, “என் மகனின் மரணத்துக்கு அவரது மனைவியே காரணம். விவாகரத்து வழக்கை காரணமாக காட்டி என் மகனை சித்ரவதை செய்தார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here