மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
‘இக்னோர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள அந்தப் பாடலை நடிகர் மணிகண்டன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் பாடலை பிரபல தமிழ் ராப் இசைப் பாடகர் யோகி பி உடன் இணைந்து நடிகை நடிகை அதிதி சங்கர் பாடியுள்ளார். இவர்களுடன் நிவாஸ் கே பிரசன்னாவும் பாடியிருக்கிறார். பாடலை எம்கே பாலாஜி எழுதி இருக்கிறார்.
யோகி பி-யின் ராப் பாணி வேகமான உச்சரிப்பில் மனம் பாடலைத் தொடரும் போது, இரண்டாவது நிமிடம் நெருங்குகையில் வேகமான இசையை இடை மறித்து இதம் தருகிறது அதிதி குரலில் ஒலிக்கும் கிராமிய தாலாட்டு. ஆனாலும், அது ரசனையை சிதைக்காமல் பாடலுக்கு இதம் சேர்த்திருக்கிறது.
நடிகை அதிதி சங்கர், இதற்கு முன்பு நிவாஸ் கே பிரசன்னாவின் தனி இசை பாடலான ‘இருவரில்’ பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ் குமார் எழுதி, இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், ஏ.வெங்கடேஷ், ஆர்.கே.விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி, ரகு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிர்லா ஸ்டூடியோஸ் – நீலம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 4 அன்று திரை அரங்குகளில் வெளியாக இருக்கிறது.
