“சிபில் ஸ்கோர் என்ற 3 இலக்க எண் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்துடன் தனியார் அமைப்புகள் விளையாடி வருகின்றன” என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது திமுக எம்.பி.கனிமொழி என்விஎன் சோமு பேசியதாவது: கோடிக்கணக்கான இந்திய மக்களில் மாணவர்கள், இளம் தொழில் முனைவோர், பெண்கள், விவசாயிகள் என யார் கடன் கேட்டு அணுகினாலும் சிபில் ஸ்கோர் என்ற 3 இலக்க எண்ணை வைத்துக் கொண்டு வங்கிகள் நடந்து கொள்ளும் விதம் பெரும்பாலான இந்தியர்களின் கனவுகளைச் சிதைக்கிறது.
ஒருவரின் வருமானம், சமூக அந்தஸ்து, தனி நபர் சுதந்திரம், மரியாதை, மனித உணர்வுகள் இவை எல்லாவற்றையும் விட இந்த சிபில் ஸ்கோர்தான் பிரதானம் என்ற அவல நிலை இந்த நாட்டில் நிலவுகிறது.
சிபில் ஸ்கோரை காரணம் காட்டி சர்வ சாதாரணமாக கடன் விண்ணப்பங்களை வங்கிகளும் வங்கிகள் அல்லாத கடன் நிறுவனங்களும் நிராகரிக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவத்தை எப்படியோ பெற்றுவிட்ட இந்த சிபில் ஸ்கோரை தீர்மானிக்கும் நிறுவனத்தை கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ, முறைப்படுத்தவோ அரசின் சார்பாக ஏதேனும் ஏற்பாடு இருக்கிறதா என்பது பற்றியும் தெளிவு இல்லை.
நம்முடைய சிபில் ஸ்கோரை இவர்கள் எப்படி தீர்மானிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை. அது சரியா நடக்கிறதா? என்ன அளவுகோல்? யார் இதைத் தீர்மானிக்கிறார்கள்? அங்கே தவறுகள் இல்லாமல் இது நடக்கிறதா என்பது யாருக்கும் வெளிப்படையாகத் தெரியாது. தன்னுடைய விஷயத்தில் தவறாக சில விஷயங்களை முடிவு செய்திருக்கிறார்கள் என்று நினைக்கும் ஒரு நபர், யாரை அணுகி அந்தத் தவறை சரி செய்வது என்பதிலும் எளிமையான வழிகள் இல்லை.
படித்தவர்களின் நிலையே இப்படி என்றால், கடனுதவியால்தான் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும் என்ற நிலையில் உள்ள பாமரர்களின் நிலை என்ன? அதிலும் தவறை சரி செய்யும் பொறுப்பை அந்த நிறுவனம் ஏற்காது. அந்தத் தனி நபரே சரி செய்ய வேண்டுமாம்.
இந்த நிலையில், உங்கள் சிபில் ஸ்கோரை எப்படி அதிகமாக வைத்திருப்பது? குறையாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்ற கோஷங்களுடன் சில தனியார் நிறுவனங்களும் களத்தில் இறங்கியிருக்கின்றன. அதற்கு ஒரு பெரும் தொகையைக் கட்டணமாகவும் வசூலிக்கின்றன. இவர்கள் யார்? இவர்களுக்கு இந்த அனுமதியைத் தந்தது யார் எதுவும் தெரியாது. தங்கள் சிபில் ஸ்கோரில் செய்யப்பட்ட தவறுகளைச் சரி செய்யவே அப்பாவி மக்கள் பணம் செலவிட வேண்டி உள்ளதுதான் வேதனையான விஷயம்.
நிதி மேலாண்மை உள்ளிட்ட எந்த விஷயமும் இயந்திரங்களாலோ, கணக்கீடுகளாலோ மட்டும் முடிவு செய்யப்படுவதில்லை. மனித உணர்வுகளை, தனி மனித சூழல்களையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
எனவே, சிபில் ஸ்கோர் விஷயத்தை முழுமையாகக் கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில், சட்டப்பூர்வமான, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஓர் அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.
அப்படிச் செய்தால் மட்டுமே தவறுகள் நடைபெறாமலும், தவறுகள் ஏற்பட்டாலும் எளிதில் சரிசெய்யும் வாய்ப்பும் ஏற்படும். அத்துடன் வங்கிகள் கடன் வழங்கும்போது இயந்திரத்தனமாகச் செயல்படாமல், மனித உணர்வுகளை மதித்துச் செயல்படவும் அது வழிவகுக்கும்.
கடன் வழங்குவது என்பது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, சமூக அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குவதாக இருக்க வேண்டுமே தவிர, லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டதாக இருக்கக் கூடாது. நம் குடிமக்களின் நிதி சார்ந்த கவுரவத்தை கட்டுப்பாடற்ற, வெளிநபர்கள் தீர்மானிப்பதை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.







