ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிராக 3 விக்கெட்களைக் கைப்பற்றியது எப்படி என்பது தொடர்பான விவரங்களை இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி பகிர்ந்துள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்ரீ சரணி 7 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பிரேமா ராவத் 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களையும், தீப்தி சர்மா 5 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களையும் சாய்த்தனர். பின்னர் விளையாடிய இந்திய அணி 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஆட்டநாயகியாக இந்திய வீராங்கனை சரணி தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணியின் வெற்றி குறித்து சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணி கூறியதாவது:
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீராங்கனைகள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து ஆலோசனை செய்தோம். பிரேமா ராவத், தீப்தி சர்மா, ராதா யாதவ் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதித்தோம். நாங்கள் ஆலோசனை செய்த திட்டங்களை போட்டியில் அப்படியே செயல்படுத்தினோம். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு உதவும் என்பதை உணர்ந்தோம். அதற்கேற்ப எங்களது திட்டங்களை மிகச் சரியாக செயல்படுத்தினோம்.
எங்கள் திட்டம், களத்தில் சரியாக வேலை செய்தது. இந்திய அணியின் வெற்றியும் எளிதானது.
இந்தப் போட்டியில் நான் 3 விக்கெட்களை வீழ்த்தியது மகிழ்ச்சி. சக வீராங்கனைகளின் ஒத்துழைப்பால்தான் 3 விக்கெட்களைக் கைப்பற்ற முடிந்தது. இவ்வாறு ஸ்ரீ சரணி தெரிவித்தார்.
