துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கேப்டன் இஷான் கிஷன் சதத்தால் கிழக்கு மண்டல அணி முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்துள்ளது.
துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. கிழக்கு மண்டலம், தென் மண்டல அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.
டாஸில் வெற்றி பெற்ற கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் தனது அணியை முதலில் பேட்டிங் செய்ய களமிறக்கினார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிமன்யு ஈஸ்வரன், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர்.
வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 44 ரன்கள் குவித்த நிலையில் மிலிந்த் பந்தில், தியாகராஜனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து களத்துக்கு வந்த ஷிகர் மோகன் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். அவர் 120 பந்துகளில் 85 ரன்கள் குவித்து அவுட்டானார்.
அரை சதத்தை கடந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த அபிமன்யு ஈஸ்வரன் 86 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்த நிலையில் ரன்-அவுட்டானார். சுதீப் குமார் கராமி 6 ரன்களில் பெவிலியன் வந்தார்.
இதையடுத்து 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் இஷான் கிஷனும், குமார் குஷக்ராவும் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய கேப்டன் இஷான் கிஷன் முதல் நாள் போட்டியிலேயே சதம் விளாசினார். மறுமுனையில் குமார் குஷக்ரா தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.
முதல் நாள் ஆட்டநேர இறுதியில் கிழக்கு மண்டல அணி 79 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்துள்ளது.
இஷான் கிஷன் 111 ரன்களும் (14 பவுண்டரி, ஒரு சிக்ஸர்), குமார் குஷக்ரா 63 ரன்களும் (4 பவுண்டரி, 5 சிக்ஸர்) குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 5-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 26.4 ஓவர்களில் 144 ரன்கள் குவித்துள்ளது.
தென் மண்டல அணி சார்பில் சாமா வி. மிலிந்த் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். திரிபுரான விஜய் ஒரு விக்கெட்டைச் சாய்த்தார்.
கைவசம் 6 விக்கெட்கள் மீதமுள்ள நிலையில் இன்று 2-ம் நாள் ஆட்டத்தை கிழக்கு மண்டல அணி தொடர்ந்து விளையாடவுள்ளது.
