இண்டிகோ விமான சேவை முடங்கியபோது பிற நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியது எப்படி என டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) புதிய பணி நேர விதிகள் (எப்டிடிஎல்) காரணமாக, நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை கடந்த வாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு தலையிட்டதையடுத்து நிலைமை சீரடைந்து வருகிறது. எனினும், 9-வது நாளான நேற்றும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடிலா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலைப் பார்த்து நீதிபதிகள் கூறும்போது, “இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது ஏன்? இதற்கு யார் பொறுப்பு? விமான நிலையங்களில் பயணிகள் அவதிக்குள்ளாயினர் என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இண்டிகோ விமான சேவை முடங்கியபோது, மற்ற நிறுவனங்கள் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தது எப்படி? டெல்லி-மும்பை, டெல்லி-பெங்களூரு, டெல்லி-சென்னை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் கட்டணங்கள் பல மடங்கு (ரூ.39 ஆயிரம் வரை) உயர்ந்தது எப்படி? கட்டண உயர்வைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையிலும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் வாதிடும்போது, “இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு இண்டிகோ நிறுவனத்துக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. கட்டண உயர்வைத் தடுக்க உடனடியாக கட்டண உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது” என்றார். இதையடுத்து வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.







