மகாராஷ்டிர புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்தவர். அவரது தந்தை கங்காதர் ராவ் ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர் ஆவார். தற்போதைய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பட்னாவிஸின் தந்தை கங்காதர் ராவின் ஆதரவுடன் பாஜகவில் வளர்ந்தவர். அவரது மறைவுக்கு பிறகு தேவேந்திர பட்னாவிஸ் அரசியலில் கால் பதித்தார். ஆரம்ப காலத்தில் அவர் நிதின் கட்கரியின் ஆதரவாளராகவே இருந்தார்.
மகாராஷ்டிர பாஜகவில் நிதின் கட்கரிக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே காய்களை நகர்த்தி வந்தார். இந்த சூழலில் கட்கரி அணியில் இருந்து முண்டே அணிக்கு தேவேந்திர பட்னாவிஸ் மாறினார். மகாராஷ்டிர அரசியலில் மராத்தா சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதை மாற்ற பாஜக தலைமை திட்டமிட்டது. கோபிநாத் முண்டேவின் மறைவுக்குப் பிறகு தேவேந்திர பட்னாவிஸை பாஜக தலைமை முன்னிறுத்தியது.
கடந்த 2009-ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 46 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கடந்த 2014-ம் ஆண்டில் பட்னாவிஸ் தலைமையில் பாஜக தேர்தலை சந்தித்தது. அப்போது பாஜக 122 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் மகாராஷ்டிராவின் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். அவர் 5 ஆண்டுகள் திறம்பட ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். இதன்காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
ஆனால் திடீர் திருப்பமாக உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் அணிக்கு மாறியதால் பாஜக ஆட்சியை இழந்தது. இதன் பிறகு பட்னாவிஸின் காய் நகர்த்தலால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்தன. கடந்த 2022-ல் முதல்வர் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. அப்போது பாஜக தலைமையின் உத்தரவை ஏற்று துணை முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்றார்.
ஆர்எஸ்எஸ் தலைமையுடன் நெருங்கிய உறவு, தேர்தல் பிரச்சார வியூகம், எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தியது. தலைமையின் உத்தரவுக்கு கீழ்பணிவது, கூட்டணி தலைவர்களுடன் சுமுக உறவு, ஆட்சி நிர்வாக அனுபவம் உள்ளிட்ட காரணங்களால் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்று உள்ளார்.














