அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேரவை தலைவர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும்? – உயர் நீதிமன்றம்

0
226

சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் 40 பேர் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேரவைத் தலைவர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என்பது குறித்து விளக்கமளிக்க வழக்கு தொடர்ந்துள்ள அதிமுக நிர்வாகிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்று பேசிய பேரவைத் தலைவர் மு.அப்பாவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், ஆனால், அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

பேரவைத் தலைவரின் இந்த பேச்சு அதிமுகவுக்கும், அதிமுக எம்எல்ஏ-க்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி அவருக்கு எதிராக அதிமுக வழக்கறிஞரணி இணைச் செயலாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யவும், அதுவரை விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேரவை தலைவர் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள பாபு முருகவேலுக்கு எதிராக மனுதாரர் எந்தவொரு அவதூறு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. அவர் பொத்தாம் பொதுவாகத்தான் தெரிவித்துள்ளார்” என்றார்.

அதற்கு பாபு முருகவேல் தரப்பில், அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியிருந்ததால், கட்சி சார்பில் பேரவைத் தலைவருக்கு எதிராக அவதூறு வழக்கை தொடர தனக்கு கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் பி,வில்சன், “அரசியல் கட்சி சார்பில் வழக்கு தொடருவதாக இருந்தால் கட்சியின் தலைவரோ அல்லது பொதுச் செயலாளரோதான் தொடர முடியும்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “பேரவைத் தலைவர் மு.அப்பாவு தனது பேச்சில் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பேசவில்லை. சம்பந்தப்பட்ட 40 எம்எல்ஏ-க்களில் யாரும் இந்த வழக்கை தொடரவில்லை. பேரவைத் தலைவருக்கு எதிராக இந்த அவதூறு வழக்கை தொடர பாபு முருகவேலுக்கு என்ன அடிப்படை உரிமை உள்ளது? குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அவருடைய பேச்சு இல்லை. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக கற்பனையாக கூறக்கூடாது” என கருத்து தெரிவித்தார்.

பின்னர் அதிமுக எம்எல்ஏ-க்கள் 40 பேர் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேரவைத் தலைவர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என்பது குறித்து விளக்கமளிக்க பாபு முருகவேலுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் அக்.22-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here