ஜேம்ஸ் கன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூப்பர்மேன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரமான சூப்பர்மேனை அடிப்படையாகக் கொண்டு 70-களில் இருந்து திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. கடைசியாக ஜாக் ஸ்னைடர் இயக்கிய டிசி படங்களில் சூப்பர்மேனாக ஹென்றி கெவில் நடித்திருந்தார். தற்போது டிசி காமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் நிறைவடைந்ததால் ஹென்றி கெவில் டிசி படங்களில் இருந்து வெளியேறி விட்டார். மார்வெல் நிறுனத்தின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன் தற்போது டிசி நிறுவனத்துக்காக பணியாற்றி வருகிறார்.
அடுத்த வெளியாகவுள்ள புதிய சூப்பர்மேன் படத்தை ஜேம்ஸ் கன் இயக்கி முடித்துள்ளார். இதில் சூப்பர்மேனாக டேவிட் கோரன்ஸ்வெட் நடிக்கிறார். இப்படம் வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன் டீசர் ட்ரெய்லர் வியாழக்கிழமை (டிச.19) வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி? – ட்ரெய்லரின் முதல் காட்சியில் பனிப் படர்ந்த ஒரு நிலப்பரப்பில் சூப்பர்மேன் ரத்தக் காயங்களுடன் கிடக்கிறார். அவரின் விசில் சத்தத்தைக் கேட்டு பனிப் புழுதியை கிளப்பியபடி ஏதோ ஒன்று படுவேகமாக வருகிறது. அதுதான் டிசி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த க்ரிப்டோ என்னும் சூப்பர்பவர் கொண்ட நாய். இதுவரை காமிக்ஸிலும், அனிமேஷன் வடிவிலும் மட்டுமே இடம்பெற்ற இந்த நாய் முதன்முறையாக திரைப்படத்தில் வருகிறது.
வழக்கமான சூப்பர்மேன் பாணி படங்களைப் போல ஜேம்ஸ் கன்னின் இந்த சூப்பர்மேன் இருக்காது என்பதை ட்ரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. காரணம், ட்ரெய்லரின் சாயலில் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ பாணி காட்சியமைப்புகளை பல இடங்களில் பார்க்க முடிகிறது. ‘ஷசாம்’ படம் தவிர்த்து இதுவரையிலான டிசி படங்கள் பெரும்பாலும் ஒருவித டார்க் டோனிலேயே இருக்கும். அதை ‘சூசைட் ஸ்குவாட்’ மூலம் ஜேம்ஸ் கன் உடைத்தார். தற்போது இந்த படமும் மார்வெல் பாணியில் கலர்ஃபுல்லாக இருப்பதை காண முடிகிறது. இனி வரும் டிசி படங்களுக்கு இது ஒரு புதிய தொடக்கமாக இருக்கும். 1978 சூப்பர்மேன் படத்தில் ஜான் வில்லியம்ஸ் உருவாக்கிய தீம் இசை இதிலும் அட்டகாசமாக பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பு. ‘சூப்பர்மேன்’ டீசர் வீடியோ:














