வைஜெயந்திமாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ஐடிஎம் பல்கலைக்கழகம் சென்னையில் வழங்கியது

0
203

பழம்பெரும் திரைப்பட நடிகையும் பரதக் கலைஞருமான வைஜெயந்திமாலா பாலிக்கு, ஐடிஎம் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளருக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை சென்னையில் வழங்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் நகரத்தில் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனம் ஐடிஎம் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா வரும் நவம்பர் 23-ம்தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.

வைஜெயந்திமாலா பாலி, மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், மத்தியப் பிரதேசகல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர், ஐடிஎம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ருச்சி சிங், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா உள்ளிட்ட இந்தியாவின் கலை, வரலாறு, கல்வி, ஆட்சி நிர்வாகம், விளையாட்டு ஆகிய துறைகளில் சாதனை படைத்துள்ள 13 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

வைஜெயந்திமாலாவின் உடல்நலனை கருத்தில் கொண்டு ஐடிஎம் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் யோகேஷ் உபாத்தியாய் தலைமையிலான மூன்று கல்வியாளர்கள் குழு, சென்னை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள வைஜெயந்திமாலாவின் இல்லத்தில் நேற்று மாலை அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவம் செய்தது.துணைவேந்தருடன் பேராசிரியர்கள் மனீஷ் புஷ்கலே,மனீஷ் ஜெய்சால் உடனிருந்தனர்.

விருது குறிப்பில் ‘பாரம்பரியபரத நாட்டியக் கலை, இந்திய சினிமா ஆகிய இரு கலைத்துறைகளில் 75 ஆண்டுகளைக் கடந்து வைஜெயந்திமாலா பாலி செய்து வந்திருக்கும் சாதனைகளும் பரதக் கலை தொடர்பாக அவர் செய்துள்ள ஆய்வுகளும் இந்திய கலை, கலாச்சாரத்துக்கு பெரும் சொத்து களாகும்’ என்று கூறப்பட்டுள்ளது விருது நிகழ்வின் போதுவைஜெயந்திமாலாவின் மகன் சுசீந்திரா பாலி, அவரது மனைவி, இரு மகள்கள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here