பிரபல ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா. நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான, ‘மண்டேலா: லாங் வாக் டூ ஃபிரீடம்’(2013), அமெரிக்கன் கேங்ஸ்டர் (2007), பசிபிக்ரிம் (2013), த டார்க் டவர் (2017), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), த சூசைட் குவாட் (2020) உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பிலிருந்து வெளியேறி படம் இயக்குவதில் கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் நடந்து வரும் ரெட் சீ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட இட்ரிஸ் எல்பா அளித்துள்ள பேட்டியில், “நீண்ட காலமாக நடித்து வருகிறேன். நடிப்பு எனக்குப் பிடிக்கும். இப்போதும் பிடித்திருக்கிறது. ஆனால், படம் இயக்குவதன் மூலம் என்னை வித்தியாசமானவனாக மாற்ற முடியும் என்று நம்புகிறேன். அதையும் நான் மிகவும் ரசிக்கிறேன். இதற்காக என் ரசிகர்கள் என் மீது கோபப்படமாட்டார்கள் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.







