கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு விசாரணையை 4 வாரத்தில் தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

0
125

கலாஷேத்ரா நடனப்பள்ளியின் முன்னாள் பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கு விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும் என சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நடனப்பள்ளியில் கடந்த 1995 – 2001 காலகட்டத்தில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், தன்னை அந்த நடனப்பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக போலீஸில் புகார் அளித்தார்.

ஆனால் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அந்த மாணவி கடந்த 2023-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், மனுதாரரான முன்னாள் மாணவி அளித்த புகாரின்பேரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியரான ஶ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு எதிராக கடந்தாண்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, சைதாப்பேட்டை 18-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, என்றார்.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு எதிரான இறுதி அறிக்கையை கோப்புக்கு எடுத்து 4 வாரங்களில் விசாரணையைத் தொடங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here