Home மாநில செய்திகள் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவையில் நாளை மிக கனமழை

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவையில் நாளை மிக கனமழை

0

தமிழகத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், வடக்கு கேரள பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் (மே 19), நாளையும் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21 முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றுமுதல் 22-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் ஓகேனக்கல்லில் 12 செமீ, கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் 10 செமீ, நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆகிய இடங்களில் தலா 9 செமீ, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 8 செமீ, ராமேசுவரம், சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம், எடப்பாடி, ஏத்தாப்பூர், சேலம், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, வெட்டிக்காடு, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், குடவாசல் ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version