சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவர்கள் நிம்மதியடைந்தனர்.
சென்னை ஓட்டேரி, பிரிக்லின் சாலையில் தேங்கிய மழை நீர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தமிழக கரையை நெருங்கிய நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
மேற்கு மாம்பலம் அப்பு தெரு, ராமகிருஷ்ணாபுரம் பகுதிகளில் சூழ்ந்த மழைநீர்.
நேற்று மன்னார் வளைகுடா அருகே நெருங்கிய நிலையில், நேற்று அதிகாலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. பின்னர் காலை முதல் விட்டுவிட்டு கனமழையாக கொட்டித் தீர்த்தது.
தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகனங்கள்.
இதன் காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மோட்டார் பம்ப்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கனமழை காரணமாக மேற்கூறிய 4 மாவட்டங்களிலும் காலை 6 மணி அளவிலேயே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பெற்றோர்களும், மாணவர்களும் நிம்மதியடைந்தனர். மாநகரில் அனைத்து சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. மாநகராட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் நேற்று நண்பகலில் பெய்த மழையால்
இரவு போல காட்சியளித்தது. | படம்: எம்.முத்துகணேஷ் |
நேற்று காலை 8.30 மணி வரை சென்னை கொளத்தூர், மாதவரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 11 செமீ, செங்குன்றம், அயப்பாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா 10 செமீ மழை பதிவாகியிருந்தது. நேற்று காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை பதிவான மழை அளவுகளின்படி மீனம்பாக்கத்தில் 9 செமீ, திருத்தணியில் 7 செமீ, நுங்கம்பாக்கத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.














