காற்று மாசு அதிகரிப்பால் டெல்லியில் கடும் பனி மூட்டம்: 300 விமானங்கள் தாமதம்

0
166

டெல்லியில் கடந்த 2 நாட்களாக காற்று மாசு மிக அதிகமாக இருந்தது. நேற்று மிக மோசமான நிலைக்கு சென்று கடும் பனிமூட்டம் நிலவியது. டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் 32 மையங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியது. இது மிக மோசமான காற்று மாசு நிலை. நேற்று முன்தினம் 334-ஆக இருந்த காற்று மாசு அளவு நேற்று காலை 9 மணியளவில் 428 ஆக அதிகரித்தது.

இதனால் டெல்லியின் ஆனந்த் விஹார் , இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், மந்திர் மார்க், பட்பர்கன்ஜ் ஆகிய பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. மலைப் பகுதிகளில் பனிப் பொழிவு காரணமாக, டெல்லி குறைந்தபட்ச வெப்பநிலை 16.1 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது.

இதனால் காலையிலும், மாலையிலும் பனிமூட்டம் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு காற்று மாசும் இணைந்துள்ளது. டெல்லியில் ஏற்பட்ட பனி மூட்டம் காரணமாக விமான நிலையத்தில் 115 விமானங்களின் வருகையும், 226 விமானங்களின் புறப்பாடும் தாமதமானது. டெல்லியில் காற்றின் வேகம் மிகவும் குறைவாக இருந்ததால், நேற்று கடும் பனி மூட்டம் நிலவியது. இன்று காற்று மாசு அளவில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here