வங்கதேசம் – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பார்ரி மெக்கார்த்தி 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 92.2 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பார்ரி மெக்கார்த்தி 31, மேத்யூ ஹம்ப்ரிஸ் 0 ரன்களில் வெளியேறினர்.
வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹசன் முராத், தைஜூல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 85 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரரான ஷத்மான் இஸ்லாம் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மஹ்முதுல் ஹசன் ஜாய் 283 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 169 ரன்களும், மொமினுல் ஹக் 124 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள வங்கதேச அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.














