முல்தான்: பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் முச்சதம் விளாசியதால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது.
முல்தானில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து, 3-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 492 ரன்கள் குவித்திருந்தது. இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டத்தை ஜோ ரூட் 176, ஹாரி புரூக் 141 ரன்களுடன் தொடங்கினர். தொடர்ந்து அபாரமாக விளை யாடிய ஜோ ரூட் இரட்டைச் சதம் விளாசினார். அவர் 375 பந்துகளில் 262 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ஹாரி புரூக் 322 பந்துகளில் 317 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன்கள் குவித்த நிலையில் இன்னிங்ஸை டிக் ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 267 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து. பின்னர் பாகிஸ்தான் அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாடியது.
அப்துல்லா ஷபிக் 0, சயீம் அயூப் 25, ஷான் மசூத் 11, பாபர் அஸம் 5, சவுத் ஷகீல் 29, முகமது ரிஸ்வான் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து தோல்வியின் பிடியில் உள்ளது. சல்மான் ஆகா 41, அமீர் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்னும் 115 ரன்கள் பின்தங்கிய நிலையில் 4 விக்கெட் கைவசத்துடன் இன்று 5-ம் நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.