ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ள எம்.எஸ்.தோனி, ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையை எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது. இதன் பின்னர் கடந்த 2024-ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த வரிசையில் தற்போது 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
அகமதாபாத்தில் இருந்து நேற்று மும்பை திரும்பிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: டி20 உலகக் கோப்பையை 2024 மற்றும் 2026 என அடுத்தடுத்து வெல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மிகச்சிறந்த உணர்வு. நாங்கள் 2024-ல் வென்றபோது, மீண்டும் ஒருமுறை 2026-ல் நமது சொந்த மண்ணிலேயே வென்றால் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று நினைத்தோம்
அடுத்த இலக்கு 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதுதான். இந்திய அணி தற்போது நல்ல உத்வேகத்துடன் உள்ளது. 2028-ம் ஆண்டில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையையும் இந்திய அணி வென்றால், மிகவும் சிறப்பாக இருக்கும்.
டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன்களில் ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகியோரது வரிசையில் நானும் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இவர்களுடன் இணைந்துள்ள தருணத்தை நான் மெல்ல உணரத் தொடங்குகிறேன்.
மிகப் பெரிய வீரர்களான இவர்களுடன் நானும் இடம்பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்காலத்திலும் நான் இதையே செய்ய முயற்சிப்பேன், இந்திய அணி அதிக கோப்பைகளை வெல்ல தொடர்ந்து உதவுவேன். டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நான், தோனியை சந்தித்தேன். அப்போது அவர், ஐசிசி தொடரை எப்படி அணுகவேண்டும் என கற்றுக்கொடுத்தார்.
நம்மிடம் சிறந்த அணி இருக்கிறது, நாம் தைரியமாகச் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அவர் என்னிடம் கூறினார். வெற்றிக்குப் பிறகு அவரது ரியாக் ஷன் அற்புதமாக இருந்தது. உலக சாம்பியன்களான அந்த இரவில் நாங்கள் செய்த அனைத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நாங்கள் காலை 8 மணி வரை விழித்திருந்து நேரத்தைக் கழித்தோம்.
தற்போதைய திட்டம் சிறிது காலம் ஓய்வெடுக்க வேண்டும். அதன் பிறகு ஐபிஎல் தொடருக்குத் தயாராவேன். அடுத்த சுழற்சியில் நாங்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்காகத் தயாராவோம். அங்கு தங்கம் வெல்வதே எங்களது முக்கிய குறிக்கோளாக இருக்கும். இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.














