வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதத் தயாரிப்புப் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐ.டி.எஃப்) அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக விளங்கிய ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியது.
இதில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதத் தயாரிப்புப் பிரிவின் முக்கிய தளபதியான ஃபாரெஸ் அல்-மஸ்ரி என்பவர் உயிரிழந்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் அமைப்பின் ராணுவ வலிமையை மீண்டும் கட்டமைக்கும் நோக்கில் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
‘நுஜ்பா’ படை வீரர் பலி
அதே நாளில் வடக்கு காசாவில் நடத்தப்பட்ட மற்றொரு வான்வழித் தாக்குதலில், முகமது அபு ஷாகியன் என்பவர் கொல்லப்பட்டார். இவர் ஹமாஸ் அமைப்பின் சிறப்பு கமாண்டோ பிரிவான ‘நுஜ்பா’ படையில் பணியாற்றி வந்தவர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.
