தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் தொடங்கியது: சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 402 பேர் சென்றனர்

0
203

தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் தொடங்கியது. சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 402 பேர் புறப்பட்டனர். தமிழகத்திலிருந்து நடப்பாண்டு 5,730 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக 5,407 பேரும், மீதமுள்ள 323 பேர் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்தும் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 402 பேர் அடங்கிய முதல் குழுவினர் நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தனி விமானத்தில் ஜெட்டாவுக்கு புறப்பட்டனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் சிறுபான்மையர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழி அனுப்பி வைத்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் தமிழக மாநில ஹஜ் குழு தலைவர் ப.அப்துல் சமது, செயல் அலுவலர் மு.அ.சித்திக், நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினர் அசன் மவுலானா மற்றும் பிறப்படுத்தப்பட்டோர் – சிறுபான்மையினர் நலத்துறை செயலர் சா.விஜயராஜ்குமார் உள்ளிட்ட உடன் இருந்தனர்.

அப்போது, அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித பயணத்தின் முதல்கட்ட பயணம் தொடங்கியுள்ளது. வரும் 30-ம் தேதி வரை தமிழகத்திலிருந்து ஹஜ் புனித பயணத்துக்கு பயணிகள் செல்கின்றனர். 14 விமானங்கள் மூலம் 5,730 பேர் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். முதல் நாளான இன்று (நேற்று) மட்டும் 843 பேர் செல்கின்றனர். பயணம் செய்பவர்களுக்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயணம் மேற்கொள்பவர்களுக்கு உரிய உணவு, தங்குமிடம் என தமிழக அரசு பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒரு நபருக்கு ரூ.3,000 அல்லது ரூ.2,000 கூட தரப்படுவதில்லை. ஆனால், இந்த ஆட்சியில் பயணம் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25,000 மானியம் வழங்கப்படுகிறது.

இதற்காக இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்காக ரூ.14.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பித்த அனைத்து நபர்களுக்கும் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here