நடிகரும் இயக்குநருமான சுரேஷ் சந்திர மேனன் ‘புதிய முகம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர். தொடர்ந்து ‘பாசமலர்கள்’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். பின்னர், தானா சேர்ந்த கூட்டம், ஜுங்கா, காளிதாஸ் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள அவர், சென்னை போக்குவரத்துத் திட்டமிடல் நிபுணராகவும் இருக்கிறார். அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘குரு த மென்டர்’.
இப்படம் பற்றி அவர் கூறும்போது, ‘‘இது ஜென்ஸி தலைமுறைக்கான திரைப்படம். இதில் 10 பெண்கள், 10 ஆண்கள் என 20 புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறேன். நான் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி குருவாக வருகிறேன். கிராமப் புறங்களில் இருந்து 20 பேரை சென்னைக்கு அழைத்து வந்து அவர்களை என்னவாக உருவாக்குகிறேன், எப்படி மாற்றுகிறேன், அதில் ஏற்படும் சவால்கள் என்ன என்பதுதான் படம்.
இன்றைய தலைமுறைக்கு அறிவுரை சொன்னாலோ, போதித்தாலோ பிடிக்காது. அதனால் அவர்களுக்கு ஏற்றவகையில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் ரொமான்ஸ் விஷயங்கள் இருக்காது. அதே போல இந்தப் படத்தை, குறிப்பிட்ட ஜானருக்குள்ளும் அடக்க முடியாது. 33 வருஷத்துக்குப் பிறகு மீண்டும் இயக்குநராகி இருக்கிறேன்.
கடந்த சில வருடங்களாக, நல்ல திரைப்படங்களை மக்கள் திரையரங்குக்கு வந்து பார்க்கிறார்கள். அதனால்தான் எனக்கும் மீண்டும் படம் இயக்க நம்பிக்கை வந்தது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. டிசம்பரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
