கரூரில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து அரசியல் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, ரோடு ஷோக்களில் நெரிசலைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மதுரை பூத குடியைச் சேர்ந்த கே.கதிரேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ரோடு ஷோ மற்றும் மாநாடுகளில் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் தவறுகளால் கட்சியினர், அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் உயிரிழப்பது அதிகரிக்கிறது. கரூரில் செப்.27-ல் தவெக தலைவர் விஜய் நடத்திய அரசியல் பேரணியில் 41 பேர் உயிரிழந்தனர்.
மயங்கி விழுந்து உயிரிழப்பு: கூட்டத்தில் பங்கேற்றோர் பலமணி நேரம் குடிநீர், உணவு இல்லாமல் வெயிலில் நின்றிருந்தது, காற்றோட்டம் இல்லாதது, உடலில் நீர் சத்து குறைந்தது போன்ற காரணங்களால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து பலர் இறந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன.
கடந்த 1992-ல் கும்பகோணம் மகாமக விழா கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர். 2005-ல் சென்னை எம்ஜிஆர் நகரில் வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவில் நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர், 37 பேர் காயமடைந்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற பேரணி, பொதுக்கூட்டம், மாநாடுகள், ரோடுஷோக்களில் கூடும் கூட்டங்களை மேலாண்மை செய்யும் நடை முறைகள் பின்பற்றப்படாததுதான் காரணமாக உள்ளது. தேசிய பேரழிவு மேலாண்மை ஆணையம், தேசிய பேரழிவு மேலாண்மை நிறுவனம், போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் வகுத்த கூட்ட மேலாண்மை வழிகாட்டுதலைப் பின்பற்றி பேரணி, ரோடு ஷோ, மாநாடு உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கூட்டங்களைக் கட்டுப்படுத்த உரிய விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் நிலையான செயல் முறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
கரூர் தான்தோன்றிமலையைச் சேர்ந்த தங்கம், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உட்பட தவெகவுக்கு எதிராக பல மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் அக்.3-ல் விசாரணைக்கு வருகிறது. தவெக சார்பில் சிபிஐ விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற பதிவாளரிடம் நேற்று முன்தினம் அனுமதி கோரப்பட்டது. அக்.3-ல் நடைபெறும் விடுமுறைக்கால நீதிமன்றத்தில் விசாரிக்கும் வகையில் நேற்று மனுத் தாக்கல் செய்யுமாறு தவெக நிர்வாகிகளுக்கு கூறப் பட்டது.
முன்ஜாமீன் மனுக்கள்… அதன்படி நேற்று தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனு தாக்கல் செய்யப்படவில்லை. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதால் அவர் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யவில்லை என கட்சி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.