தலைமைச் செயலர் முருகானந்தத்துடன் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் குழு சந்திப்பு

0
186

இந்திய அயலகப் பணிப் பிரிவைச் சேர்ந்த 7 அலுவலர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தத்தை சந்தித்ததுடன், தமிழகத்தின் பாரம்பரிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆய்வு செய்கின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் தேசிய அளவில் பொருளாதாரத்தில் சிறந்த 2-வது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. தொழில் வளர்ச்சியிலும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிறந்த மாநிலமாகவும் விளங்குகிறது.

தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை விளக்கிடும் கீழடி முதலான தொல்லியல் அகாழய்வு மையங்கள் என பல்வேறு பெருமைக்குரிய சின்னங்கள் தமிழகத்தில் நிறைந்துள்ளன.

பண்பாட்டுப் பெருமைகளை விளக்கும் மாமல்லபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம், அய்யன் திருவள்ளுவர் சிலை, தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் முதலான சுற்றுலா மையங்கள் தமிழகம் முழுவதிலும் அமைந்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரு வாரம் தங்கி, இவை அனைத்தையும் ஆய்வு செய்ய, இந்திய ஆட்சிப் பணிகள் பிரிவின் ஒன்றான இந்திய அயலகப் பணி (ஐஎஃப்எஸ்) பிரிவைச் சேர்ந்த கோபில்லா கிருஷ்ணா ஸ்ரீவத்சவ், ஜி.கிருஷ்ணகுமார், பி.அனுஜா, ஜி.சத்யநந்தி, ஜி.ஹரிசங்கர், பி.வி.அப்துல் பசல், கோகுல் கிருஷ்ணா ஆகிய 7 பேர் அடங்கிய குழு நேற்று தமிழகம் வந்தது.

தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தத்தை இக்குழுவினர் நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அப்போது, வருவாய்த் துறைச் செயலர் பி.அமுதா, மனிதவள மேலாண்மைத் துறைச் செயலர் சி.சமயமூர்த்தி உடனிருந்தனர்.

இக்குழுவினர், சிப்காட் தொழில் வளாகங்கள், திருவள்ளுவர் சிலை, மாமல்லபுரம் முதலான சுற்றுலா மையங்கள், தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமையையும், தொன்மையையும் நிலைநாட்டும் கீழடி முதலான தொல்லியல் மையங்கள் முதலியவற்றை பார்வையிடுகின்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here