சென்னை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும்போது வெறும் 8,932 என நிர்ணயித்துள்ளதை மாற்றி குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுகளில் தொகுதி 4-ன் கீழ் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி, நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதே நிலை நீதிமன்றங்களிலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 என நிர்ணயிக்கப்பட்டிருப்பது மிக மிக குறைவாகும். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதைக் கருத்தில் கொண்டு டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-ன் கீழ் வரும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரம் வரை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து, அரசுத் துறைகளில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.














