மும்பை சாம்பியன் இடது கை ஸ்பின்னர் ‘கிரேட்’ பத்மாகர் ஷிவால்கர் காலமானார். அவருக்கு வயது 85. கிரேட் ஸ்பின்னரான இவர் இந்தியாவுக்காக ஆடியதே இல்லை என்பதுதான் இதில் வருத்தத்திற்குரிய விஷயம். இவரது இயற்பெயர் பத்மாகர் காஷிநாத் ஷிவால்கர்.
இவர் முதல் தர கிரிக்கெட்டில் 124 போட்டிகளில் ஆடி 515 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 1961/62 முதல் 1987/88 வரை இவர் ஆடியிருக்கிறார், மிக நீண்ட கரியர். இதில் ஒருமுறை ஒரு இன்னிங்ஸில் 16 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார்.
இவரோடு அடிக்கடி ஒப்பிட்டுப் பேசக்கூடியவர் ரஜிந்தர் கோயல். இவர் ஹரியாணா இடது கை ஸ்பின்னர். இவரும் இந்திய அணிக்கு ஆடாமலேயே ரஞ்சி வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய சாதனையை தன் வசம் வைத்திருப்பவர். இருவரும் இந்திய அணியில் வர முடியாததற்குக் காரணம் பிஷன் சிங் பேடி.
2017-ம் ஆண்டு கோயலுக்கும் ஷிவால்கருக்கும் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனை விருது அளிக்கப்பட்ட போது சுனில் கவாஸ்கர் தெரிவித்தது, “அப்போதைய கேப்டன் பிஷன் சிங் பேடியை எப்படியாவது சம்மதிக்க வைத்து கோயலையும் பத்மாகர் ஷிவால்கரையும் அணியில் தேர்வு செய்ய வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அது முடியாமல் போனது இன்றும் எனக்கு வருத்தமே. இவர்கள் இந்திய இடது கை ஸ்பின்னின் மகா காலத்தில் விளையாடியவர்கள். இந்திய அணிக்காக ஏகப்பட்ட டெஸ்ட் போட்டிகளை ஆடியிருக்க வேண்டியவர்கள்” என்றார்.
மும்பை ரஞ்சியின் கிங் ஆக இருந்த போது சுனில் கவாஸ்கரும், ஷிவால்கரும் ஒரே ஓய்வறையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். 1965-66/1976-77 10 ஆண்டு மும்பை ரஞ்சி சாம்பியன் வெற்றியில் பத்மாகர் ஷிவால்கர் பங்களிப்பு ஏராளம். 7 ஆண்டுகள் ஆடாமல் பிறகு 47 வயதில் மீண்டும் மும்பை அணிக்கு ஆடினார் பத்மாகர் ஷிவால்கர்.
இவரது அறிமுகப் போட்டியே முதல் தர கிரிக்கெட்டில் இவருக்கு ஒரு பெரிய கிரவுன் ஆக அமைந்தது. இந்தியா பிரெசிடெண்ட் லெவன் கிளப்புக்காக இவர் இண்டெர்னேஷனல் லெவன் அணிக்கு எதிராகத் தேர்வு செய்யப்பட்டார், எதிரணியில் கொலின் கவுட்ரி, எவர்டன் வீக்ஸ், ரிச்சி பெனோ போன்ற ஜாம்பவான்கள் இருந்தனர். அந்தப் போட்டியில் ஷிவால்கர் 129 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும் பிறகு 2 விக்கெட்டுகளை 44 ரன்களுக்கும் கைப்பற்றி அசத்தினார், அந்த போட்டி டிரா ஆனது.
இவர் எடுத்த மொத்த முதல் தர கிரிக்கெட் விக்கெட்டுகளான 589-ல் 361 விக்கெட்டுகள் ரஞ்சி போட்டியில் எடுக்கப்பட்டவை. இவரது சிறந்த பவுலிங்கான 8/16 என்பது நம் சேப்பாக்கத்தில் தமிழ்நாடு அணிக்கு எதிரான 1972-73 ரஞ்சி இறுதிப் போட்டியில் ஸ்பின் பிட்சில் வந்தது. மும்பை அந்தப் போட்டியில் 2 நாட்களில் வென்றது.
பந்தை நன்றாக பிளைட் செய்து பிட்ச் ஆகப்போகும் முன்பு பேட்டர் கணிப்புக்கு மாறாக லூப் ஆகி வேறு இடத்தில் அல்லது சற்று முன் கூட்டியே பிட்ச் ஆகி பேட்டர் ஸ்டம்ப்டு ஆகும் அவுட் தான் தனக்குப் பிடித்தமான அவுட் ஆக்கும் முறை என்று இவர் ஒருமுறை கூறியுள்ளார். உண்மையான லெஜண்ட், இன்று நம்மிடையே இல்லை. இந்திய அணிக்கு ஆடாமல் போனது நமக்கும், கிரிக்கெட் உலகிற்கும் பேரிழப்பே.