இந்தியாவின் ஏவுகணை நாயகன், மக்கள் குடியரசு தலைவர் என போற்றப்படும் அப்துல் கலாமின் 96-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, தமிழக அரசின் சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் ப.வெங்கடரமணன், ஏ.ராஜ்மோகன், ஜா.முகமது பர்வேஸ் ஆகியோர் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கலாமின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு திட்டங்களில் அப்துல் கலாமின் அளப்பரிய பங்களிப்புகள் நம் நாட்டின் அறிவியல் திறன்களையும், சுயசார்பையும் வலுப்படுத்தின. வளர்ந்த இந்தியா என்ற அவரது தொலைநோக்கு பார்வை 2047-ல்
வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற நமது இலக்கை நோக்கிய பயணத்துக்கு வழிகாட்டியாக இருக்கிறது. வலிமையான, வளமையான, சுயசார்புள்ள இந்தியாவை உருவாக்கும் வகையில் கலாமின் கொள்கைகளை நிலைநிறுத்த உறுதியேற்போம்’’ என்று கூறியுள்ளார்.
முதல்வர் விஜய் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளில், அவர் நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
இஸ்ரோ விஞ்ஞானி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், குடியரசுத் தலைவர் எனப் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்த போதிலும், ‘ஆசிரியர்’ என்ற அடையாளத்தையே தன் வாழ்வின் மகுடமாகக் கருதி, இறுதி மூச்சுவரை மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த அம்மாமனிதரின் எளிமை, நேர்மை, அறிவியல் சிந்தனை போற்றுதலுக்குரியவை” என குறிப்பிட்டுள்ளார்.
