முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாக மோசடியில் ஈடுபட்ட JNF Trading நிதி நிறுவன உரிமையாளர் ஜெயபால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட JNF Trading என்ற நிதி நிறுவனத்தின் உரிமையாளரான குலசேகரத்தை சேர்ந்த ஸ்டானிஸ்லாஸ் என்பவரின் மகன் ஜெயபால், தனது நிறுவனத்தின் மூலம் மீன் மற்றும் காய்கறி உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருவதாகவும், பொதுமக்கள் முதலீடு செய்தால் அதற்கு மாதம் 9% முதல் 14% வரை வட்டி வழங்கப்படும் என்றும் கூறி பலரிடம் முதலீடு பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அவரது போலி வாக்குறுதிகளை நம்பிய கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பல கோடி ரூபாய் முதலீடாகப் பெறப்பட்டு, பின்னர் முதலீட்டுத் தொகையை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் பெறப்பட்டன. இதுவரை 23 புகார்தாரர்களிடமிருந்து பெறப்பட்ட ரூ. 8 கோடியே 47 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான முதலீட்டுத் தொகை தொடர்பாக புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதனையடுத்து, JNF Trading நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ஜெயபால், நிறுவனத்தின் மேலாளர் மற்றும் முகவர்கள் ஆகியோர் மீது கன்னியாகுமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் குற்ற எண் 02/2025-ன் கீழ் IPC பிரிவுகள் 406, 420, 120(B), TNPID Act பிரிவு 5 மற்றும் BUDS Act பிரிவுகள் 21(3), 23 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. J. ஜெயபால் பர்னபாஸ் மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி C. எழிலரசி ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயபால் 29.08.2026 அன்று கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கின் தன்மை மற்றும் குற்றச்செயலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பொருளாதார குற்றப்பிரிவு தென் மண்டல காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. சரவணகுமார் அவர்களின் பரிந்துரையின் பேரில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திருமதி M. பிரதாப், I.A.S., அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயபாலை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, ஜெயபால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகள் மீது கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும், இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட நினைப் போருக்கு எச்சரிக்கையாக அமைவதுடன், பொதுமக்களின் முதலீட்டு பணத்தை பாதுகாக்கவும், எதிர்காலத்தில் நிகழக்கூடிய நிதி நிறுவன மோசடிகளைத் தடுக்கவும் உதவும்.
பொதுமக்கள் அதிக வட்டி, அதிக லாபம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி முதலீடு செய்வதற்கு முன்பு, அந்த நிறுவனம் அரசின் உரிய அனுமதி மற்றும் பதிவு பெற்றதா என்பதை உறுதி செய்து, விழிப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
