நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் திரிசூலி பகுதியில் உள்ள விவசாய மேம்பாட்டு வங்கி பாதிக்கப்பட்டது. அங்குள்ள லாக்கரில் இருந்த ரூ.1.5 கோடி ரொக்கம், ரூ.50 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் திரிசூலி பகுதியில் கடந்த புதன்கிழமை திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள விவசாய மேம்பாட்டு வங்கியின் திரிசூலி துங்கே கிளை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ஆபத்தான சூழ்நிலையிலும் உடனடியாகக் களமிறங்கிய நேபாள காவல் துறையினர், சுமார் 8 மணி நேரம் போராடி வங்கி லாக்கரிலிருந்த ரூ.1.5 கோடி ரொக்கம், ரூ.50 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை மீட்டு, பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினர். இந்த மீட்பு நடவடிக்கை குறித்த வீடியோவை நேபாள காவல் துறை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவா பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள சித்வான் வனப்பகுதியில், அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான உடல்கள் அழுகத் தொடங்கின. இதனால் பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, வழக்கமாக நடைபயிற்சி மேற்கொள்ளப்படும் அந்த காட்டுப் பகுதியிலேயே அதிகாரிகளால் பல உடல்கள் அவசரமாக அடக்கம் செய்யப்பட்டன.
