பாமக இளைஞர் சங்கத் தலைவராக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை நிறுவனர் ராமதாஸ் மீண்டும் நியமித்துள்ளார். பாமக தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜி.கே.மணியை ஆறுதல்படுத்தும் வகையில், அவரது மகன் தமிழ்குமரனுக்கு மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை நிறுவனர் ராமதாஸ் வழங்கினார்.
ஆனால், அன்புமணியின் எதிர்ப்பு காரணமாக தமிழ்க்குமரன் பதவியிலிருந்து விலகினார். பின்னர், ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தன் இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கும் அன்புமணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையில், 5 மாதங்களில் முகுந்தனும் பதவி விலகினார். இந்த விவகாரம் தொடர்பாக ராமதாஸ்-அன்புமணிக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக ஜி.கே.மணி மகன் தமிழ்குமரனை கட்சி நிறுவனர் ராமதாஸ் மீண்டும் நியமித்துள்ளார். இதற்கான கடிதத்தை தைலாபுரத்தில் ராமதாஸ் நேற்று தமிழ்க்குமரனிடம் வழங்கினார். பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அன்புமணியின் எதிர்ப்பு காரணமாக ஏற்கெனவே தமிழ்க்குமரன் பதவி விலகினார்.
பின்னர் அப்பதவியை எனது பேரன் முகுந்தனுக்கு வழங்கினேன். இதனால் மேடையிலேயே என் மீது ‘மைக்’ பாய்ந்தது. இப்போது அதே பொறுப்பை தமிழ்குமரனுக்கு மீண்டும் வழங்கி இருக்கிறேன். அவர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன். பாமகவினர் அனைவரும் தமிழ்குமரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். அரசியல் கட்சிக் கூட்டங்களை நடத்தும்போது, ஒரு உயிரைக்கூட இழக்காத வகையில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காவல் துறையினர் கண்டிப்புடன் வழிகாட்ட வேண்டும். கரூர் சம்பவத்தில் ஒரு முதல்வர் என்ன செய்ய வேண்டுமோ, அதை ஸ்டாலின் செய்துள்ளார். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.