ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கேமரூன் கீரீன்.
இந்த வகையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது கேமரூன் கிரீன் முறியடித்துள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை வாங்கப்பட்ட 3-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த வகையில் ரிஷப் பந்த் (ரூ.27 கோடி), ஸ்ரேயஸ் ஐயர் (ரூ.26.75 கோடி) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸில் கேமரூன் கிரீன், பதிரனா: கேமரூன் கிரீனை ஏலம் எடுக்க முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி விலகிக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மல்லுக்கட்டியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.25 கோடி வரை மோதி பார்த்தது. ஆனால் இறுதியாக ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. கேமரூன் கிரீனின் அடிப்படை தொகை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இதேபோன்று கடந்த சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரனாவை ஏலம் எடுக்க டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் கடுமையாக போட்டியிட்டன. இவர்களுடன் போட்டியில் இணைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதிரனாவை ரூ.18 கோடிக்கு வாங்கியது. அவரது அடிப்படை தொகை ரூ.2 கோடியாக இருந்தது. ஏலத்துக்கு ரூ.64.30 கோடியுடன் வந்திருந்த கொல்கத்தா அணி கேமரூன் கிரீன், பதிரனா ஆகியோருக்கு மட்டும் ரூ.43.20 கோடியை செலவிட்டது.
மேலும் வங்கதேச அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முஸ்டாபிஸுர் ரஹ்மானை ரூ.9.2 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி. அவரது அடிப்படை தொகை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து நியூஸிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஃபின் ஆலனை ரூ.2 கோடிக்கும், அதிரடி பேட்ஸ்மேனான டிம் ஷெய்பர்ட்டை ரூ.1.50 கோடிக்கும் வாங்கியது.
கார்த்திக் சர்மாவை தட்டி தூக்கிய சிஎஸ்கே: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ராஜஸ்தானை சேர்ந்த கார்த்திக் சர்மாவை ரூ.14.20 கோடிக்கும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான பிரசாந்த் வீரை ரூ.14.20 கோடிக்கும் ஏலம் எடுத்தது. இதன் மூலம் இவர்கள் இருவருமே சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் என்ற சாதனையை படைத்தனர். மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அகீல் ஹோசைனை ரூ.2 கோடிக்கும், மும்பையில் பிறந்த புதுச்சேரியை சேர்ந்த ஆல்ரவுண்டரான அமன் கானை ரூ.40 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது சிஎஸ்கே அணி.
தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக்கை அவரது அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த அணிக்காக டி காக் 2019, 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் விளையாடி இருந்தார். இங்கிலாந்து அணியின் பென் டக்கெட்டை ரூ.2 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் ஏலம் எடுத்தது. அவர், முதன்முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.
நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபியை அவரது அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு ராயல் சாலஞ்சர்ஸ் அணி வாங்கியது. ஜேக்கப் டஃபி இதற்கு முன்னர் ஐபிஎல் தொடரில் விளையாடியது இல்லை.
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்க்கியா, இலங்கையின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா ஆகியோரை தலா ரூ.2 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஏலம் எடுத்தது. சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயை ரூ.7.20 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை ஏலம் எடுப்பதில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில் பெங்களூரு அணி அவரை ரூ.7 கோடிக்கு வாங்கியது.
ஜம்மு காஷ்மீர் பந்து வீச்சாளர் அகிப் நபி: டெல்லி கேபிடல்ஸ் அணி தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் மில்லரை அவரது அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அகிப் நபியை ரூ.8.40 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான ஜேசன் ஹோல்டரை ரூ.7 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது.
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கூப்பர் கானொலியை ரூ.3 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இலங்கையின் பதும் நிசங்காவை ரூ.4 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது. டெல்லியை சேர்ந்த விக்கெட் கீப்பரான தேஜஸ்வி தஹியாவை ரூ.3 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. ராஜஸ்தான் விக்கெட் கீப்பரான முகுல் சவுத்ரியை ரூ.2.60 கோடிக்கும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான அக் ஷத் ரகுவன்ஷியை ரூ.2.20 கோடிக்கும் லக்னோ அணி வாங்கியது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மங்கேஷ் யாதவை பெங்களூரு அணி ரூ.5.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை அவரது அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. இங்கிலாந்து ஆல்ரவுண்டரான லியாம் லிவிங்ஸ்டனை ரூ.13 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலம் எடுத்தது. அவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாக இருந்தது. கொல்கத்தா அணியுடன் கடுமையாக போட்டியிட்டு லிவிங்ஸ்டனை ஹைதராபாத் அணி வாங்கி உள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்லிஷை ஹைதராபாத் அணியின் பலத்த போட்டிக்கு இடையே ரூ.8.60 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றியை அவரது அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கும், சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சாஹரை ரூ.5.20 கோடிக்கும் சிஎஸ்கே வாங்கியது.
ஆஸ்திரேலிய அணியின் பென் டுவார்ஷுயிஸை ரூ.4.40 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. சர்ஃபராஸ் கானை ரூ.75 லட்சத்துக்கும், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான மேத்யூ ஷார்ட்டை ரூ.1.50 கோடிக்கும் சிஎஸ்கே வாங்கியது. பிரித்வி ஷாவை ரூ.75 லட்சத்துக்கும், லுங்கி நிகிடியை ரூ.2 கோடிக்கும் டெல்லி அணி ஏலம் எடுத்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தானை சேர்ந்த மிதவேகப்பந்து வீச்சாளரான அசோக் சர்மாவை ரூ.90 லட்சத்துக்கு வாங்கியது. ஆகாஷ் தீப்பை ரூ.1 கோடிக்கும், ராகுல் திரிபாதியை ரூ.75 லட்சத்துக்கும் கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. நமன் திவாரியை லக்னோ அணி ரூ.1 கோடிக்கு வாங்கியது.
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான ஜேக் எட்வர்ட்ஸை ரூ.3 கோடிக்கும், சலில் அரோராவை ரூ.1.50 கோடிக்கும், ஷிவம் மாவியை ரூ.75 லட்சத்துக்கும் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது.
அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்: கேமரூன் கிரீன் (கொல்கத்தா) ரூ.25.20 கோடி, பதிரனா (கொல்கத்தா) ரூ.18 கோடி, பிரசாந்த் வீர் (சிஎஸ்கே) ரூ.14.20 கோடி, கார்த்திக் சர்மா (சிஎஸ்கே) ரூ.14.20 கோடி, லியாம் லிவிங்ஸ்டன் (ஹைதராபாத்) ரூ.13 கோடி, முஸ்டாபிஸுர் ரஹ்மான் (கொல்கத்தா) ரூ.9.20 கோடி, ஜோஷ் இங்லிஷ் (லக்னோ) ரூ.8.60 கோடி, அகிப் நபி (டெல்லி) ரூ.8.40 கோடி, ரவி பிஷ்னோய் (ராஜஸ்தான்) ரூ.7.20 கோடி, ஜேசன் ஹோல்டர் (குஜராத்) ரூ.7 கோடி, வெங்கடேஷ் ஐயர் (பெங்களூரு) ரூ.7 கோடி.







