ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் பதிவான சுவாரஸ்யங்கள் இங்கே…
டாஸ் தோல்வியில் சமன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸில் தோல்வி அடைந்தார். தொடர்ச்சியாக அவர், டாஸை இழப்பது இது 12-வது முறையாகும். நவம்பர் 2023 முதல் மார்ச் 2025 வரையிலான காலக்கட்டத்தில் அவர், டாஸில் தோல்விகளை சந்தித்துள்ளார்.
இந்த வகையில் மேற்கு இந்தியத் தீவுகளின் ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை 26 வருடங்களுக்கு பிறகு சமன் செய்துள்ளார் ரோஹித் சர்மா. பிரையன் லாரா அக்டோபர் 1998 முதல் மே 1999 வரை 12 ஆட்டங்களில் தொடர்ச்சியாக டாஸில் தோல்வி கண்டிருந்தார்.
ADVERTISEMENT
HinduTamil3rdMarchHinduTamil3rdMarch
38 ஓவர்கள் சுழல்: இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு 38 ஓவர்களை வீசியது. வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி 9 ஓவர்களையும், ஹர்திக் பாண்டியா 3 ஓவர்களையும் வீசினர். அக்சர் படேல் 8 ஓவர்களை வீசி 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த போதிலும் அவருக்கு முழுமையாக 10 ஓவர்கள் வழங்கப்படவில்லை.
வில்லியம்சன் சாதனை காலி: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ரச்சின் ரவீந்திரா 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் அவர், ஒட்டுமொத்தமாக 2 சதங்களுடன் 263 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஓர் தொடரில் அதிக ரன்கள் குவித்த நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார் ரவீந்திரா. இதற்கு முன்னர் கேன் வில்லியம்சன் 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 244 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
பவுண்டரி வறட்சி: நியூஸிலாந்து அணி 13.3 ஓவர்களில் இருந்து 26.5 ஓவர்கள் வரை எந்தவித பவுண்டரியையும் அடிக்கவில்லை. சுமார் 81 பந்துகளுக்கு பிறகு குல்தீப் யாதவ் வீசிய பந்தை நேர் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் கிளென் பிலிப்ஸ்.
இரு முறை தப்பித்த ரவீந்திரா: 6.3-வது ஓவரில் ரச்சின் ரவீந்திர 28 ரன்களில் இருந்து கொடுத்த கடினமான கேட்ச்சை முகமது ஷமி தவறவிட்டார். தொடர்ந்து 7.1-வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்தில் ரச்சின் ரவீந்திரா கொடுத்த கேட்ச்சை டீப் மிட்விக்கெட் திசையில் கோட்டைவிட்டார் ஸ்ரேயஸ் ஐயர். இரு முறை தப்பித்த போதிலும் ரவீந்திரா கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்டுத்திக்கொள்ளவில்லை.
ரோஹித் அதிரடி தொடக்கம்: 252 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்தார். கைல் ஜேமிசன் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தை ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ரோஹித் சர்மா, வில்லியம் ரூர்க் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டினார். தொடர்ந்து நேதன் ஸ்மித் வீசிய 6-வது ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசி அசத்தினார் ரோஹித் சர்மா. பின்னர் நேதன் ஸ்மித் வீசிய 8-வது ஓவரில் லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாசிய ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளையும் விரட்ட இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தன. அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 41 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் தனது 58-வது அரை சதத்தை கடந்தார். முதல் 10 ஓவர்களை சிறப்பாக ஆடியது இந்தியா.
அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த இந்தியா: இறுதிப்போட்டியில் 18 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. அதற்கடுத்த 10 ஓவர்களில் வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்களை இழந்தது. கில், கோலி மற்றும் ரோஹித் ஆட்டமிழந்தனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் – அக்சர் படேல் பொறுப்பான ஆட்டம்: இந்திய அணி மிடில் ஓவர்களில் விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் பொறுப்புடன் ஆடினர். இருவரும் 4-வது விக்கெட்டுகக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
நெருக்கடி கொடுத்த நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள்: சான்ட்னர், பிரேஸ்வெல், ரச்சின் மற்றும் கிளென் பிலிப்ஸ் என நியூஸிலாந்து தரப்பில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இணைந்து மொத்தம் 35 ஓவர்களை வீசினர். இதில் பிலிப்ஸை தவிர மற்ற மூவரும் தலா 10 ஓவர்கள் வீசினர். சான்ட்னர் மற்றும் பிரேஸ்வெல் தாள் 2 விக்கெட் வீழ்த்தினர். ரச்சின் ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார்.
கே.எல்.ராகுல் பினிஷிங் டச்: இந்த தொடரில் 6-வது பேட்ஸ்மேனாக விளையாடினார் ராகுல். அந்த ரோலை உணர்ந்து அவர் பொறுப்புடன் ஆடினார். இறுதிப் போட்டியின் 33 பந்துகளில் 34 ரன்களை அவர் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.
ரச்சின் தொடர் நாயகன்: இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 263 ரன்கள் எடுத்த நியூஸிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின், தொடர் நாயகன் விருதை வென்றார். அவர் 2 சதங்களை பதிவு செய்துள்ளார்.
ஆட்ட நாயகன் ரோஹித்: இந்த தொடரில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 5 போட்டிகளில் விளையாடி ஒத்தடம் 180 ரன்கள் எடுத்தார். 41, 20, 15, 28 என முதல் நான்கு போட்டிகளில் அவர் ரன் எடுத்திருந்தார். இந்த நிலையில் தான் இறுதிப் போட்டியில் 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். சவாலான ஆடுகளத்தில் சிறப்பாக ஆடிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.














