விஜய், சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் நவம்பர் 21-ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது.
விஜய்யின் பழைய ஹிட் படங்கள் தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. ‘கில்லி’, ‘சச்சின்’ உள்ளிட்ட படங்களின் வரிசையில் ‘ப்ரண்ட்ஸ்’ படமும் இணைந்திருக்கிறது. இப்படத்தினை டிஜிட்டல் முறையில் 4கே தொழில்நுட்பத்தில் மாற்றி, நவம்பர் 21-ம் தேதி வெளியிடவுள்ளார்கள். இதற்காக போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த 2001-ம் ஆண்டு மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான படம் ‘ப்ரண்ட்ஸ்’. இதில் விஜய், சூர்யா, தேவயானி, வடிவேலு, ராதாரவி, விஜயலட்சுமி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் காமெடி காட்சிகள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படத்தில் வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரத்தை முன்வைத்தே சமீபத்தில் ‘#PrayForNesamani’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு அந்தக் கதாபாத்திரம் பிரபலம். இப்போது வெளியிடப்படும் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படமும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.