டெல்லியில் மழலையர் கல்வி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
டெல்லியில் முக்கிய கட்சிகளான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்றும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன, பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.
பாஜக தனது தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை கடந்த வாரம் வெளியிட்டது. இதில் பெண் வாக்காளர்களை குறிவைத்து சலுகைகள் அறிவிக்கபட்டிருந்தன.
இந்நிலையில் தேர்தல் அறிக்கையின் இரண்டாம் பகுதியை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் கல்வி மற்றும் மாணவர் நலனில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் வருமாறு:
டெல்லியில் அரசுக் கல்வி நிறுவனங்களில் மழலையர் கல்வி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ரூ.15,000 உதவித் தொகை மற்றும் போக்குவரத்து செலவு வழங்கப்படும்.
தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி படிக்கும் எஸ்சி சமூக மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். ஒன்றரை லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். மேலும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடும் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடும் வழங்கப்படும். குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை தரப்படும்.
வீட்டுப் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு, குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் சம்பளத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். இவ்வாறு பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.














