கஸ்டம்ஸ் அதிகாரி போல் நடித்து மும்பை மருத்துவரிடம் ரூ.26 லட்சம் மோசடி

0
326

மகாராஷ்டிராவின் நவி மும்பை கன்சோலியில் வசிக்கும் மருத்துவர் ஒருவருக்கு ஆகஸ்ட் 26-ம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் கஸ்டம்ஸ் அதிகாரி என கூறி, நீங்கள் துபாய்க்கு அனுப்பிய பார்சலில் ஆட்சேபத்துக்குரிய போதைப் பொருட்கள் மற்றும் போலீஸ் சீருடைகள் இருப்பதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அந்தேரி பகுதி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்ய இருப்பதாகவும், பணமோசடி மற்றும் தீவிரவாதிகளுடன் மருத்துவருக்கு தொடர்பு இருப்ப தாக புகாரில் தெரிவிக்க உள்ளதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவரிடம் இந்தசிக்கல்களில் இருந்து வெளிவருவதற்கு ரூ.26.52 லட்சத்தை ஆன்லைனில் பல்வேறு வங்கி கணக்குகளில் செலுத்தும்படி அந்த நபர் மிரட்டியுள்ளார். பணம் செலுத்திய பிறகும்தொடர்ந்து பணம் கேட்டு அந்தநபர் நெருக்கடி அளி்த்துள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் அந்த சைபர் மோசடி கும்பல் மீது நவி மும்பை காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல் துறை ஆய்வாளர் கஜனன் காதம் கூறுகையில், “அடையாளம் தெரியாத மோசடியாளர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. மருத்துவரிடமிருந்து திருடப்பட்ட பணத்தை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சைபர் மோசடி பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here