உலக தமிழா​ராய்ச்சி நிறு​வனத்தை பார்​வை​யிட்ட மொரிஷியஸ் முன்​னாள் துணை அதிபர் பரமசிவம்

0
292

மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி சென்னையில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நேற்று பார்வையிட்டார்.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: தமிழியல் உயராய்வுகளுக்கென சென்னை தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி நேற்று வருகை புரிந்தார். நிறுவன ஆய்வுப் பணிகளை கேட்டறிந்த அவர், அங்கு அமைக்கப்பட்டுள்ள பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தையும் பார்வையிட்டார்.

இதுதவிர இங்குள்ள தொல்காப்பியர் அரங்கம், திருவள்ளுவர் அரங்கம், ஔவையார் அரங்கம், இளங்கோவடிகள் அரங்கம், கபிலர் அரங்கம், தமிழ்த்தாய் ஊடக அரங்கம் ஆகியவற்றையும் பார்வையிட்டு சிறப்புகளைக் கேட்டறிந்தார். தொல்காப்பியர் அரங்கில், நிறுவன மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே உரையாற்றிய அவர், தமிழினப் பண்பாடு குறித்தும் இலக்கண இலக்கியச் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

ADVERTISEMENT

HinduTamil3rdMarch
HinduTamil3rdMarch

அதன்பின் உலகத் தமிழர் பரவல் குறித்துப் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள புடைப்பு ஓவியத்தைப் பார்வையிட்டு, தமிழகத்தில் சேலம், திருச்சியில் வாழ்ந்த அவர்தம் பெற்றோரின் பூர்வீகம் குறித்தும், தற்போது மொரிசீயசில் வசித்து கொண்டிருப்பதையும் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார். வாழ்வியல் காட்சிக்கூடம், பழங்கால தமிழர்களின் பண்பாடுகளை உலகுக்கு பறைசாற்றி நிற்பதாகவும், நிறுவனத்தில் பல்வேறு தமிழ்ப் பணிகள் முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், உலக தமிழராய்ச்சி நிறுவனத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், இயக்குநர் ஸ்டாலின் கோபிநாத், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூட பொறுப்பாளர் ஆ.மணவழகன், நிறுவன பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here