முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் (90) மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று காலமானார்.
மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரை சேர்ந்த வர் சிவராஜ் பாட்டீல். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் 1972-ம் ஆண்டு முதல் முறையாக மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். 2 முறை எம்எல்ஏவாக இருந்தபோது, முதலில் துணை சபாநாயகராகவும், பின்னர் சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தேசிய அரசியலுக்கு வந்த அவர், 1980-ம் ஆண்டு முதல் முறையாக லாத்துார் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். சிவராஜ் பாட்டீல் 2004 முதல் 2008 வரை மத்திய உள்துறை அமைச்சராகவும், 1991 முதல் 1996 வரை மக்களவைத் தலைவராகவும் இருந்தார். மேலும், பஞ்சாப் மாநில ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்த சிவராஜ் பாட்டீல், நேற்று லாத்துாரில் அவரது இல்லத்தில் காலமானார். நீண்ட காலமாக அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.







