மறைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நேற்று மண்டியாவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா (93) பெங்களூருவில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முக்கிய அரசியல் தலைவர்கள், கன்னட திரையுலகினர், தொழில் துறையினர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நேற்று காலையில் பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊரான மண்டியாவை அடுத்துள்ள மத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுக காங்கிரஸ், பாஜக, மஜதவை சேர்ந்த தொண்டர்கள் அவரது உடலுக்கு பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினர். மண்டியாவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடலுக்கு ஒக்கலிகா மடாதிபதிகள், கன்னட அமைப்பினர், காவிரி நீர் பாதுகாப்பு போராட்ட குழுவினர் உட்பட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் மாலையில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், எஸ்.எம்.கிருஷ்ணாவின் குடும்பத்தார் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவரது மறைவால் நேற்று கர்நாடகாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. 3 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதால், தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.














