மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக சென்னையில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூல்

0
330

கடந்த நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். அரையாண்டுக்கு ஒருமுறை ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் சொத்து வரி செலுத்த வேண்டும்.

இதில், கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.1,750 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், 2024-25 நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை எட்டுவதற்காக, கடந்த ஒரு மாதமாக மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் வீடு வீடாக சென்று வரி வசூல் செய்து வந்தனர்.

விடுமுறையிலும் வரி வசூல்: குடியிருப்பு சங்கங்கள் உதவியுடன் சிறப்பு வரி வசூல் முகாம்களையும் மாநகராட்சி நடத்தி வந்தது. கடந்த மார்ச் 29 முதல் 31-ம் தேதி வரை 3 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக இருந்தாலும், சொத்து வரி வசூல் நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. நேற்று நள்ளிரவு 12 மணி வரை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மாநகர வருவாய் அலுவலர் பானுசந்திரன் தலைமையில் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி, நேற்று இரவு 8 மணி வரை கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2 ஆயிரம் கோடிக்குமேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இது அதற்கு முந்தைய நிதியாண்டைவிட ரூ.275 கோடி அதிகமாகும்.

இதேபோன்று தொழில் வரி ரூ.570 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டைவிட ரூ.38 கோடி அதிகமாகும். இன்றுமுதல் செலுத்தப்படும் முந்தைய நிதியாண்டுகளுக்கான சொத்துவரிக்கு 2 சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும்.

இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை இன்றுமுதல் ஏப்.30-ம் தேதிக்குள் செலுத்தினால், அதில் 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here