மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் பலத்த மழை காரணமாக குற்றாலம், மணிமுத்தாறு, திற்பரப்பு அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில், கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குளிர்ந்த காற்றுடன் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 10 செ.மீ., ஊத்து பகுதியில் 9 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.
இதன் காரணமாக, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. நேற்று காலை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து அருவிகளிலும் குளிக்க இரண்டாவது நாளாக தடை நீடித்தது. காலை 10 மணிக்கு பின்னர், நீர்வரத்து சீரடைந்ததால் ஐந்தருவி மற்றும் புலியருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. சாரல் சீஸன் களைகட்டியுள்ளதால் தமிழகம் மற்றும் கேரளத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிகின்றனர்.
இதுபோல், மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து நிலவும் வெள்ளப்பெருக்கு காரணமாக, 9-வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், திற்பரப்பு அருவியில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இதனால், இங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
